Also Watch
Read this
By: Fyrose Banu

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் கிழக்கு நிழற்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருவதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.சிடிஎச் (Chennai–Tiruttani Highway) சாலைக்கு இணையாக அமைந்துள்ள இந்த கொரட்டூர் சாலையை, அலுவலக நேரங்களில் சிடிஎச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கழிவுநீர் கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் இருந்து எடுக்கப்படும் மண் சாலையோரங்களில் முறையாக அகற்றப்படாமல் சிதறிக் கிடக்கிறது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் அந்த மண் தண்ணீருடன் கலந்து சாலை முழுவதும் சகதியாக மாறுவதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், சாலையில் மண் மற்றும் சகதி குவிந்து கிடப்பதால் வாகனங்கள் வழுக்கி விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். சிடிஎச் சாலையிலும் கொரட்டூர் சாலையை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டிகள் தற்போது பணிகள் காரணமாக அந்த சாலையை தவிர்த்து வருவதால், சிடிஎச் சாலையில் வழக்கத்தைவிட கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஒருபுறம் கழிவுநீர் கால்வாய் பணி நடைபெறும் சாலையில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவிக்கின்றனர். மறுபுறம் மாற்று வழியான சிடிஎச் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.கால்வாய் பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேலும், கால்வாய் பணிக்காக தோண்டப்படும் மண்ணை சாலையில் கொட்டாமல், தடுப்புகள் அமைத்து அதற்குள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், பணிகள் நடைபெறும் பகுதியில் போதிய பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரட்டூர் கிழக்கு நிழற்சாலையில் இரண்டு மாதங்களாக மந்தமாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved