Also Watch
Read this
By: Fyrose Banu

பூந்தமல்லியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 18 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம். அரசு மருத்துவமனையில் அனுமதி சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் விபரீதம் .தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லியில் சிவன் கோயில் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் இந்து அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 120க்கு மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்களுக்கு காலை உணவாக பொங்கல் வழங்கப்பட்டது. அதனை பள்ளி மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சாப்பாட்டில் பல்லி இருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சாப்பாடு கொடுப்பது நிறுத்தப்பட்டு உணவை சாப்பிட்டு 11 குழந்தைகள் பூந்தமல்லி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
அங்கு மருத்துவர்கள் 11 மாணவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே பூந்தமல்லி பெருமாள் கோயில் தெருவில் உள்ள பூவை பெண்கள் அரசு தொடக்கப்பள்ளியில் 5 மாணவர்களும், கீழ்மாநகர் தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவருக்கும் இதே போல வாந்தி ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 18 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமையல் செய்து மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உணவையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டாம் என எச்சரிக்கை கொடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மாங்காடு அருகே உள்ள தனியார் உணவு கூடத்தில் உணவு தயாரிக்கப்பட்டு பூந்தமல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்தம் 12 பள்ளிகளுக்கு ஒரே இடத்தில் உணவு தயாரித்து அனுப்பப்படுகிறது. இதில் தினமும்
1300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மேல் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 
இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு பள்ளிகளில் சமையல் அறைக்கூடம் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே ஒப்பந்ததாரர் என்பதால் ஒரே இடத்தில் உணவு தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது சம்பந்தமான தகவல் அறிந்து பூவிருந்தவல்லி வட்டாட்சியர் நடராஜன் அரசு அதிகாரிகள் சுகாதாரத் துறையினர் பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் உள்ளிட்டோர் மருத்துவமனைகளில் விரைந்து வந்து மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை குறித்து கேட்டறிந்தனர் .மேலும் தொடர்ந்து மாணவர்களை கண்காணிப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் வட்டாட்சியர் நடராஜன் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் சமையல் கூடம் காலை உணவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved