Also Watch
Read this
புதுக்கோட்டை அருகே தம்பியை வெட்டி, தலையில் கேஸ் சிலிண்டரை தூக்கிப் போட்டு கொ*ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சரின் 2ஆவது தாரத்து மகனை, முதல் தாரத்து மகன் துடிக்க துடிக்க கொ* செய்தது ஏன்? கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர்
1996ல் அதிமுக ஆட்சியில், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் வெங்கடாசலம். ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசியல் பகையால் தனது வீட்டிலேயே கொடூரமாக வெட்டி கொ* செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போதே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது குடும்பத்திற்குள் மற்றொரு கொடூர கொ* அரங்கேறியிருக்கிறது.

இரண்டு மனைவிகள்...
முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு ராஜபாண்டி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். ராஜபாண்டி தற்போது அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். 2ஆவது மனைவிக்கு ராஜதுரை, ராஜராஜன் என 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில், 2ஆவது மனைவியின் மகனான ராஜராஜன் விவசாய வேலை செய்து வந்தார். இருவருக்குமே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப சொத்து சண்டை
வெங்கடாசலம் மறைந்த பிறகு, குடும்ப சொத்துக்களை ஊர் பெரியவர்களும், சொந்தக்காரர்களும் சேர்ந்து இரு தரப்பிற்கும் பிரித்து கொடுத்தனர். ஆனால், 2ஆவது தாரத்தின் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்க கூடாது என ராஜபாண்டி அடம்பிடிக்க, இரு குடும்பத்திற்குள் பகை புகைச்சல் புகைய தொடங்கியது.

நீதிமன்றத்தில் வழக்கு
ஒரு கட்டத்தில், சொத்துப் பிரச்சினை எல்லை மீறவே, ராஜராஜனின் அண்ணன் ராஜதுரை மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2ஆவது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, அந்த வீட்டை ராஜபாண்டி பூட்டிவிட்டு ராஜராஜனை உள்ளே விடாமல் மிரட்டி வந்துள்ளார். வீடு இருந்தும் வாழ வழியின்றி, ராஜராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பல நாட்கள் சொந்த வீட்டின் வாசலிலேயே காத்து கிடந்துள்ளார். நிலைமை மோசமாகவே, வேறு வழியின்றி கடந்த சில மாதங்களாக உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

வாக்குவாதம், பயங்கரம்
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி பூட்டப்பட்டிருந்த வீட்டை திறந்து, சுத்தம் செய்து குடியேறுவதற்காக வியாழக்கிழமை அன்று ராஜராஜன் அந்த வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ராஜபாண்டி, அவருடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பேச்சுவார்த்தை முற்றி மோதலாக மாறவே, ஆத்திரத்தில் தனது கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து ராஜராஜனை வெட்டப் பாய்ந்துள்ளார் ராஜபாண்டி. உயிருக்குப் பயந்து அலறியடித்தபடி ஓடிய ராஜராஜன், சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பக்கத்து வீட்டிற்குள் புகுந்து பதுங்கியுள்ளார்.

சிலிண்டரை தூக்கி...
ஆனால், வெறியோடு விரட்டி வந்த ராஜபாண்டி, அந்த வீட்டிற்குள்ளேயே வைத்து ராஜராஜனை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார். அத்துடன் நிற்காமல், அங்கிருந்த சமையல் கேஸ் சிலிண்டரைத் தூக்கி ராஜராஜனின் தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை பிளந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் ராஜராஜன். கொ*யை செய்து முடித்த கையோடு, ராஜபாண்டி நேராக புதுக்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார். தகவலறிந்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ராஜராஜன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதிர்ச்சி சம்பவம்
சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்கோட்டை நகரப் போலீசார், உடலை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த படுகொ*யை கண்டித்தும், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில், சொத்துக்காக தம்பியின் தலையிலேயே கேஸ் சிலிண்டரை போட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved