Also Watch
Read this
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்களை எடுத்துரைக்கும் போது சர்க்காரியா கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டினார்.

அரை நூற்றாண்டுக்குப் பிறகு...
வீராணம் திட்ட டெண்டர் தொடர்பாக கமிஷன் மற்றும் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விவரங்களை முதல்வர் விஜய் முன்வைத்தார். தமிழ்நாட்டு அரசியலில் சில ஆவணங்கள் வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பதிவு செய்துவிட்டு மறைந்து போவதில்லை. அவை தலைமுறைகள் மாறினாலும், அரசியல் விவாதங்களில் மீண்டும் மீண்டும் உயிர்பெறுகின்றன. அந்த வகையில், சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சர்க்காரியா விசாரணை ஆணையத்தின் பெயர், மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளது.

சர்க்காரியா கமிஷன் உருவான பின்னணி
1970களின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் மோதல்களின் பின்னணியில் சர்க்காரியா கமிஷன் உருவானது. ஜனநாயகத்தின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் நெருக்கடி நிலை காலத்தில், கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 1976ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதன் பின்னர், திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அரசியல் தாக்கம்
அந்தக் காலகட்டத்தில், சர்க்காரியா கமிஷன் விசாரணை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் சர்க்காரியா கமிஷன் ஆவணங்கள், திமுகவின் ஆரம்பகால ஆட்சியின் நிர்வாக வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அரசியல் ஆவணமாகவே பார்க்கப்படுகிறது. சர்க்காரியா கமிஷன் விவகாரம் இப்போது மீண்டும் அரசியல் மேடைக்கு வந்திருப்பது, தமிழக அரசியலில், “ஊழல்” என்ற பிரச்சினை இன்னும் எவ்வளவு வலுவான தேர்தல் ஆயுதமாக இருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

வீராணம் திட்டம் - விஜய் அரசியல் உத்தி
முதல்வர் விஜய் தனது சட்டப்பேரவை உரையில் குறிப்பாக வீராணம் திட்டத்தை முன்வைத்தது கவனிக்கத்தக்கது. வீராணம் திட்டம் என்பது சென்னை நகரத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட முக்கியமான நீர்த் திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்துக்கான குழாய் உள்ளிட்ட பணிகளின் டெண்டர் தொடர்பாக முறைகேடு மற்றும் கமிஷன் குறித்த குற்றச்சாட்டுகள் அக்காலத்திலேயே எழுந்தன. முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, டெண்டர் தொகையில் 2.5 சதவீதம் கமிஷன் கேட்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட தொகை தவணைகளில் வழங்கப்பட்டதாகவும் அவையில் கூறினார்.

திமுகவுக்கு இது ஏன் சவால்?
“திமுக ஊழல் செய்கிறது,” என்ற பொதுவான அரசியல் குற்றச்சாட்டுக்கு பதிலாக, “இதோ ஆவணம்; இதோ அறிக்கை; இதோ வரலாறு; இதை நீங்கள் ஆய்வு செய்யுங்கள்,” என்ற அணுகுமுறையை விஜய் முன் வைத்துள்ளார். ஜென் ஸீ தலைமுறையினருக்கு சர்க்காரியா கமிஷன் உள்ளிட்டவை புதிது என்பதால், அதை திமுக எப்படி டீல் செய்யப் போகிறது? என்ற கேள்வியும் இருக்கிறது.

மீண்டும் திறக்கும் அரசியல் கதவு
சமூக நீதி, மொழி உரிமை, மாநில உரிமைகள், கூட்டாட்சி, மாநில சுயாட்சி ஆகிய அரசியல் கருத்துகளின் மீது திமுக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் அரசியல் பலம் அதன் நீண்டகால இயக்க வரலாறு. அதே நேரத்தில், இந்த நீண்ட வரலாறே பலவீனமாகவும் உள்ளது. “நீண்ட வரலாறு கொண்ட கட்சி; எனவே நீண்ட ஊழல் வரலாறும் உள்ளது,” என்ற அரசியல் வாதம் தவிர்க்க இயலாததாக மாறுகிறது. இதன் மூலம், “திமுகவுக்கு மாற்று” என்ற தனது அரசியல் அடையாளத்தை தவெக வலுப்படுத்த முனைகிறது.

வெற்றிக்கு கை கொடுக்கும்...
“நாங்கள் புதிதாக வந்தவர்கள்; பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம்,” என்ற தவெகவின் வாக்குறுதிக்கும் இது வலுசேர்க்கிறது. மறுபுறம், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே கடந்தகால ஊழல் விவகாரங்களை அதிகமாக முன்வைத்தால், “புதிய நிர்வாகத்தின் சாதனைகளை விட பழைய அரசாங்கத்தை தாக்குவதில்தான் கவனம் செலுத்துகிறாரா?” என்ற எதிர்க்கட்சியின் விமர்சனமும் வலுப்பெறலாம். எனவே கடந்தகால ஊழல் வரலாற்றை வெளிப்படுத்துவதுடன், தனது ஆட்சியின் செயல்திறனையும் தொடர்ந்து நிரூபிப்பது விஜய் சர்க்காரின் வெற்றிக்கு கைகொடுக்கும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved