Also Watch
Read this
எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு 3 நாட்கள் காத்திருந்து முதலமைச்சர் ஃபயர் பறக்க பதிலளித்துக் கொண்டிருந்தபோது, இடைவிடாமல் அமளியில் ஈடுபட்ட திமுகவினரை கண்டித்த சபாநாயகர், உங்கள் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்லை என கடிந்துகொண்டார். முதலமைச்சரே பரிந்துரை செய்தும் பதிலளிக்கும் வாய்ப்பை திமுகவினர் இழந்த நிலையில், யாரோ எழுதிக்கொடுத்து மனப்பாடம் செய்து முதலமைச்சர் ஒப்பித்துள்ளதாகவும், பேரவை தலைவரே ஜால்ராதான் அடித்துக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை...
தமிழக சட்டப்பேரவையில், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் தனது ஃபுல் எனர்ஜியையும் ஃபோர்ஸாக காட்டி பதிலளித்தார். எதிர்கட்சி வைத்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் பதிலளிக்க தொடங்கிய 15ஆவது நிமிடத்திலேயே திமுகவினர் எழுந்து நின்று அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். ஆனால், அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாத முதலமைச்சர் மழை பெய்து வெறித்தாற்போல் மொத்தத்தையும் பேசி முடித்துவிட்டுதான் இருக்கையிலேயே அமர்ந்தார்.

அனுமதி தர முடியாது
பேசுங்கள், பேசுங்கள்... எனக்கூறுவதில் இருந்த ஆர்வம் பேச்சை கேட்பதில் இல்லையே? முதலமைச்சர் பேச ஆரம்பித்ததுமுதலே அவை மாண்பை மீறி நடந்து கொள்வது நியாயமா? கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட நீங்களே அலுத்துப்போகும் அளவுக்கு அமளியில் ஈடுபடுவதா? முதலமைச்சரை பேசவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டே வந்ததுபோன்று தெரிகிறதே? அவை நடவடிக்கைகளை தமிழ்நாட்டு மக்களும், ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியுமா தெரியாதா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய சபாநாயகர், திமுகவினர் பதிலளிக்க அனுமதி தர முடியாது என கோபத்தை காட்டினார்.

என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்
பேரவை தலைவரின் இருக்கைக்கு முன்பு சம்மணம் போட்டு அமர்ந்த திமுகவினர் போராட்டக்களம் போன்று கோஷமெழுப்ப ஆரம்பித்தனர். விதிகளுக்கு முரணாக நடந்துகொள்ளும் திமுகவினர் அவையைவிட்டு அவர்களாகவே வெளியேறினால் வரவேற்கத்தக்கது, இல்லையென்றால் அவை காவலர்கள் வெளியேற்றுவார்கள் என கண்டித்தார் சபாநாயகர். அப்போது, எதிர்தரப்பினர் வார்த்தைகளால் எகிற, உங்கள் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்லை, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றார்.

அமைச்சர்கள் கைதட்டி பாராட்டு
இத்தனை அமளிதுமளிக்கு மத்தியில், சம்மணம் போட்டு அமர்ந்திருந்த திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் எழுந்திருக்கும்போது சிரமப்பட, முதலமைச்சர் விஜய் தனது கைகளை கொடுத்து தூக்கிவிட்டதோடு மேஜையையும் தள்ளி உதவி செய்தார். அதனை பார்த்து கே.என்.நேருவும் சிரிக்க, முதலமைச்சரின் இந்த செயலைக்கண்டு ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

குற்றச்சாட்டுகளை மனப்பாடம் செய்து...
அதுமட்டுமல்லாது, எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்புதான் கொடுங்களேன் என முதலமைச்சரே பரிந்துரை செய்ய, அதற்கும் தயாராகவே இருந்தார் பேரவை தலைவர். ஆனால், அமளியை விடமாட்டோம் என அதனை பிடித்துக்கொண்டு தொங்க, திமுகவினருக்கு அந்த வாய்ப்பும் பறிபோனது. அதனால், அவர்கள் அவையில் இருந்து அவுட்பஞ்ச் வைத்தனர்.
வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பேச வாய்ப்பு தருகிறோம் எனக்கூறிய சபாநாயகருக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை அதனை பறித்துக்கொண்டார் எனவும் திங்கட்கிழமை பதில் சொல்வதாக கூறிவிட்டு ரன்னிங் ரேஸ் ஓடியது போன்று ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை மனப்பாடம் செய்து முதலமைச்சர் ஒப்பித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

யார் எழுதிக் கொடுத்து...
அதே பஞ்ச் டயலாக், அதே சினிமா வசனங்கள், அதே ஆக்டிங்கைதான் முதலமைச்சர் அவையில் நிகழ்த்தி உள்ளதாக கூறிய உதயநிதி, கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் 1970களுக்கு சென்றுவிட்டதாகவும், சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசாவை பற்றி பேச அவருக்கு அருகதை உள்ளதா? யார் எழுதிக் கொடுத்து 3 நாட்களாக அவதூறு தகவல்களை மனப்பாடம் செய்துள்ளார்? தன் பட ரிலீசுக்காக கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தானே? என விமர்சனம் செய்தார்.

முதலமைச்சருக்கு தகுதி கிடையாது
மேலும், பேரவை தலைவரே ஒருதலைபட்சமாக இருந்து ஜால்ராதான் அடித்ததாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சரின் நண்பர்கள் கண்ட்ரோலில் தான் தமிழ்நாட்டின் அனைத்து கனிம வளங்களும் இருப்பதாகவும், அதனை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிட இருப்பதாகவும் கூறினார்.

மேலும், DOUBLE MEANING, TRIPLE MEANING பற்றியெல்லாம் பேச முதலமைச்சருக்கு தகுதி கிடையாது, அவரது படத்தின் வசனம், பாடல்களை எல்லாம் கூற ஆரம்பித்தால் நன்றாக இருக்காது எனவும் விமர்சனம் செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved