Also Watch
Read this
எதிர்க்கட்சிகள் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். பெரும்பாலான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் மேலோட்டமாகவே பதில் அளித்தார் என்றும் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில்...
காவல்துறை மானியக் கோரிக்கையில், எம்எல்ஏக்கள் கேட்ட கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் எந்த பதிலும் முதல்வர் விஜய்யின் பதிலுரையில் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். அவர் பேசியதாவது;
இன்றைக்கு முதலமைச்சர், காவல் துறை மானியக் கோரிக்கையில் பேசுவார் என்று எதிர்பார்த்தேன், அதற்கு பதில் கிடைக்கவில்லை. சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கு உண்டான நடவடிக்கை என்னவென்றும் சொல்லவில்லை. நீண்ட நாட்களாகப் பணியில் இருக்கின்ற காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்; அதுவும் பதிலுரையில் கிடைக்கவில்லை.

முதலீட்டு மோசடி, பதிலில்லை
“இன்றைக்கு ஒரு வருடம் பணம் போட்டால், மாத மாதம் இவ்வளவு ரூபாய் பணம் போட்டால், முதிர்ச்சி அடைகின்ற பொழுது இவ்வளவு பணம் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்,” என்று ஆசை வார்த்தை கூறி கவர்ச்சிகரமாக அறிவித்து, பணம் கட்ட வைத்து, அது முதிர்ச்சி பெறுகின்ற பொழுது, அந்த நிறுவனத்தை மூடிவிட்டு வெளியே போய் விடுகிறார்கள். அந்தப் பணத்தை மக்கள் இழந்து விடுகிறார்கள். இது, அந்தப் பகுதியில் இருக்கிற உளவுத்துறைக்குத் தெரியாதா? இப்படிப்பட்ட நிலைமை இனி, எதிர்காலத்தில் வரக்கூடாது என்று காவல் துறை மானியக் கோரிக்கையில் பேசினேன், அதற்கும் பதில் இல்லை. பொருளாதாரக் குற்றப் பிரிவு செயல்படவில்லை. இனி இந்த அரசு அதைக் கண்காணித்து செயல்பட வேண்டும் என்று அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன், அதற்கும் தகுந்த பதில் இல்லை.

சபை நேரம் வீண்டிப்பு
45 ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை எடுத்து, எதிர்க்கட்சியின் மீது ஒரு குற்றத்தைச் சுமத்துகிறார்கள். திமுக ஆட்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம், அதெல்லாம் பேசுகிறார்கள். எப்போவோ நடந்தது, இதைப் பேசிப்பேசி இன்றைக்குக் களைத்துப் போய்விட்டது. ஆக, அப்படிப்பட்ட ஒரு கருத்தைப் பேசி பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப் பேசினால் பரவாயில்லை.

மூன்று அமைச்சர்கள் தான்...
நாங்கள் கேட்ட கேள்விக்கு எதுவுமே பதில் இல்லாமல், உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையை, இன்றைக்கு ஆளுங்கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சிக்கும் இருக்கின்ற பிரச்சினையை மாறி மாறிப் பேசி நேரத்தை வீணடித்தது தான் இந்தத் தொடரின் மானியக் கோரிக்கையில் கண்ட பலன். காவல்துறை மானியத்தில் முழுமையான எந்த பதிலும் கிடைக்கவில்லை. எந்த துறை குறித்து கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள் தான் பதில் அளிக்கின்றனர். 10 மணி நேரம் சபை நடந்தாலும் 7 மணி நேரம் வீண் விவாதங்களிலேயே கழிந்து விடுகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved