Also Watch
Read this
கிணறு தோண்ட பூதம் கிளம்பியதுபோல், ஜெம் வீரமணி தொடர்பான 50 வீடியோக்கள் கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தனது 13ஆவது வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக 50 வயதான பெண் ஒருவரும் பரபரப்பை கிளப்பி உள்ளார். சட்டத்தின் ஓட்டையால் காவல்துறையில் சிக்காமல் பத்து மாதகாலத்தை கட்டிக்காப்பாற்றிய வீரமணியின் விருப்ப லிஸ்டில் பட்டியலின சிறுமிகளுக்கே முதலிடம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

குவிந்த புகார்கள்...
போக்சோ வழக்கில், ஜெயிலில் உள்ள ஜெம் வீரமணி தொடர்பாக 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளதாகவும், அவரது பாலியல் வன்கொடுமை ஹிஸ்ட்ரியில் பெரும்பாலும், பட்டியலின சிறுமிகளின் எண்ணிக்கையே அதிகம் உள்ளதாகவும் அடுத்தடுத்து புகார்கள் குவிகின்றன. அதிலும், குடிசைகளில் வசிக்கும் சிறுமிகள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சிறுமிகள், பெற்றோரின் கண்டிப்பு பெரிதாக இல்லாத சிறுமிகள், பணத்தேவையில் உள்ள இளம்பெண்களை குறிவைத்துதான் அவரது பாலியல் வேட்டையே இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

உயிரை மாய்த்த சிறுமி
மாப்பிள்ளை போன்ற ஆடை, அலங்காரத்தில் சிறுமிகளை சீரழிப்பதுதான் வீரமணிக்கு மிகவும் பிடித்த ஒன்றாம். தனது இசைக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாமல் தனது பிசினஸ் பார்ட்னர்களுக்கும் சிறுமிகளை வீரமணி விருந்தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக வீரமணியால் கடந்த 2003ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் தற்கொ* செய்து கொண்டதாகவும், அதையும் தனது பண பலத்தால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் வீரமணி மூடிமறைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு...
வீரமணி மீது தற்போதுவரை 9 பேர் புகார் அளித்துள்ள நிலையில் அதில் 50 வயதான ஒரு பெண்மணியும் அடக்கம். 1989ஆம் ஆண்டு தனக்கு 13 வயதாக இருந்தபோது புது ஆடைகள், பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து வீரமணி தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். வயது 80-ஐ தாண்டியும் தனது கொட்டத்தை அடக்காத ஜெம் வீரமணி, கையில் விலங்கு மாட்டுவதற்கு சில நாட்களுக்கு முன்புவரைகூட தனது பாலியல் சேட்டைக்கு உரமிட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

10 மாத இடைவெளிக்கு பிறகு...
இவரது தரங்கெட்ட செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களை தேடும் பணி ஒருபுறம் நடந்துவரும் நிலையில் வீரமணியின் ஆபாச ஆட்டம் குறித்து கடந்த ஆண்டு அக்டோபரிலேயே தகவல் கிடைத்தும் 10 மாத இடைவெளிக்கு பிறகுதான் அதற்கு கடிவாளமே போடப்பட்டுள்ளது.

சிக்கும் புள்ளிகள்...
தன் மீது FIR பாயாமல் இருக்க, சில கோடிகளை வீரமணி அள்ளிக் கொடுத்ததாக கூறப்படும் நிலையில், சென்னையில் அப்போது பதவியில் இருந்த ஒரு உயர் அதிகாரிக்கு தான் அந்த கோடிகள் டிரான்ஸ்பர் ஆகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பதை முழுமையாக நம்பிய வீரமணியால் அந்த பணம் மூலம் பத்து மாத இடைவெளியைதான் கட்டிக் காப்பாற்ற முடிந்தது. தனது கையூட்டு தந்திரம் கைவிட்டுப்போக FIR பாய்ந்தது. அதற்கு ஆறுதல் சொல்ல அரசியல்வாதிகள் பலர் வீரமணியின் செல்போன் எண்ணுக்கு அழைத்துள்ளதாகவும் கால் ஹிஸ்ட்ரி சொல்கிறது. இதன் மூலம் பலர் சிக்க வாய்ப்புள்ளது.

ரூ.14 கோடி பேரம்
இதனிடையே, வழக்கை முடித்து வைப்பதாக ஆசைகாட்டி வீரமணியிடம் 14 கோடிவரை வாங்கி கடைசியில் நட்டாற்றில்விட்ட அப்போதைய ஆளுங்கட்சிக்கு நெருங்கிய நபர் தற்போது வேறொரு வழக்கில் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சட்டத்தின் ஓட்டைகளின் வழியாக தான் முன்னெடுத்த அத்தனை ஆபரேஷன்களும் மண்ணாய்போக, கைது செய்ய வந்த காவலர்களிடம் தான் பல காக்கி உயரதிகாரிகளுக்கு பணத்தை பணமென பாராமல் தண்ணீர்போன்று இறைத்துள்ளதாக மனக்குமுறலை கொட்டி உள்ளார் வீரமணி.

காவல்துறை மும்முரம்...
அப்போதுதான், பண விவகாரமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீரமணிக்கு உதவிய அதிகாரிகள் யார்? வழக்கை இல்லாமல் ஆக்க வீரமணி யார் யாருக்கெல்லாம் கோடிகளை கொடுத்தார்? வீரமணி வைத்த விருந்தை அனுபவித்த வில்லங்க கூட்டளிகள் யார்? பணபரிவர்த்தனை எப்படி நடந்துள்ளது? அந்த பண பரிவர்த்தனைகளுக்கு உதவியது யார்? என அத்தனையையும் ஆதாரத்துடன் திரட்டி அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பி ஒட்டுமொத்த பேரையும் கூண்டோடு வளைத்து வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல காவல்துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved