Also Watch
Read this

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூத்துக்குடி, நாகை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

3 மாவட்டங்களில் கனமழை
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;
வடக்கு உள் கர்நாடகம் முதல் தமிழகம் வரை தெற்கு உள் கர்நாடகா வழியாக சுமார் 0.9 கி.மீ. உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி, ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

செப்டம்பர் 30
நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 01
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு
இந்தநிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூத்துக்குடி, நாகை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved