Also Watch
Read this
தேர்தல் ஆணையத்தைப் பற்றி பேசும்போது, அது ஒரே குரலில் செயல்படும் ஒரு ஒருங்கிணைந்த அதிகார அமைப்பாகவே பொதுவாகக் கருதப்படுகிறது. தேர்தல், நடத்தை விதிமுறை மீறல், தேர்தல் தகராறு தொடர்பான முடிவுகளை ஆணையம் ஒருமித்த கருத்துடன் எடுப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், 1989 முதல் தேர்தல் ஆணையம் ஒரு நபரைக் கொண்ட அமைப்பு அல்ல. அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். அப்படியானால், இந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபட முடியுமா? ஆணையத்திற்குள் உள் விவாதங்களும் மாறுபட்ட கருத்துக்களும் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவையா? கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லாதபோது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியுமா?

அரசியலமைப்பு பிரிவு 324 என்ன சொல்கிறது?
அரசியலமைப்பின் பிரிவு 324(1), வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் அனைத்து தேர்தல்களையும் நடத்தும் அதிகாரங்களைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது. பிரிவு 324(2), தேர்தல் ஆணையம் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரையும், குடியரசுத் தலைவர் அவ்வப்போது நிர்ணயிக்கும் எண்ணிக்கையிலான பிற தேர்தல் ஆணையர்களையும் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறது. "such number of other Election Commissioners, if any, as the President may from time to time fix" என்பதுதான் அசல் வாசகம். இதில் இடம்பெறும் “if any” என்ற வாசகம் முக்கியமானது.

1989ஆம் ஆண்டு வரை
அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒரு நபரைக் கொண்ட தேர்தல் ஆணையத்தை கருதி இருக்கலாம் என்பதையும், கூடுதல் தேர்தல் ஆணையர்கள் கட்டாயமானவர்கள் அல்ல என்பதையும் இது உணர்த்துகிறது. 1989ஆம் ஆண்டு வரை அப்படித்தான் இருந்தது.

ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் போது, அந்த அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அரசியலமைப்பு தெளிவான நடைமுறையை வழங்கவில்லை. பெரும்பான்மை முடிவுகள் குறித்து விதி இல்லை. கோரம் குறித்து விதி இல்லை. மாறுபட்ட கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டுமா? என்பதற்கும் விதி இல்லை. அவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டுமா? என்பதற்கும் விதி இல்லை.

டி.என்.சேஷன் காலத்தில் உள் மோதல்
இந்த இடைவெளி, இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றின் பெரும்பகுதியில் தேர்தல் ஆணையம் ஒரு நபரைக் கொண்ட அமைப்பாகச் செயல்பட்டதால் கவனிக்கப்படாமல் இருந்தது. 1989ஆம் ஆண்டில் இரண்டு தேர்தல் ஆணையர் சேர்க்கப்பட்டு ஆணையம் விரிவுபடுத்தப்பட்டது.

அதன் பின்னர் தனக்கு இணையாக நியமிக்கப்பட்ட மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் சேஷன் கடுமையாகவும் பகிரங்கமாகவும் மோதினார். அப்போது தேர்தல் ஆணையத்திற்குள் இருந்த கருத்து வேறுபாடு உண்மையானவையாகவும் வெளிப்படையானவையாகவும் இருந்தன. ஆனால் அவற்றை அரசியலமைப்பு ரீதியாகத் தீர்க்கும் நடைமுறை உருவாக்கப்படவில்லை.

கருத்து வேறுபாட்டை முடக்கும் சமச்சீரற்ற அதிகாரம்
அரசியலமைப்பின் பிரிவு 324(5), தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முக்கியமான பாதுகாப்பை வழங்குகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் நடைமுறையைப் போன்றே நாடாளுமன்றத்தின் சிறப்புப் பெரும்பான்மை நடைமுறையின் மூலம் மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்க முடியும். ஆனால், மற்ற தேர்தல் ஆணையர்களுக்கு இதே பாதுகாப்பு இல்லை. தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படலாம். இத்தகைய அதிகாரச் சமச்சீரற்ற தன்மையே ஒரு “chilling effect” எனப்படும் முடக்கும் விளைவை உருவாக்கக்கூடும். இந்தக் கவலை வெறும் கற்பனையானது அல்ல என்பதை தேர்தல் ஆணையர் லவாசா நிகழ்வு உணர்த்தியது.

மாறுபட்ட கருத்துக்கள் ஏன் முக்கியம்?
2019 மக்களவைத் தேர்தலின்போது, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா மீதான மாதிரி நடத்தை விதிமுறை புகார்களில் அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை முடிவுகளிலிருந்து தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.

ஆனால், அவரது மாறுபட்ட கருத்து அதிகாரப்பூர்வ உத்தரவுகளில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த விவகாரத்துக்குப் பின்னர், அவர் மாதிரி நடத்தை விதிமுறை தொடர்பான முழு அமர்வு கூட்டங்களைப் புறக்கணிக்கத் தொடங்கி, 2020 ஆகஸ்டில் தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் வெளியேறினாரா? வெளியேற்றப்பட்டாரா? என்ற சர்ச்சை இன்னும் அப்படியே உள்ளது.

வெளிப்படைத்தன்மை...
தேர்தல் ஆணையம் போன்ற அமைப்பில் சிறுபான்மை கருத்துகளும் முக்கியமானவை. அவை வெளிப்படையாகப் பதிவு செய்யப்படுவதும் முக்கியமானது. உச்ச நீதிமன்றம் தனது மாறுபட்ட தீர்ப்புகளை வெளியிடுகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தில் அத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லை. ஒரு தேர்தல் ஆணையர் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும், அந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தால் கூட அது பொதுவெளிக்கு வருவதில்லை. இதனால் ஒரு முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதா? அல்லது 2:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட்டதா? என்பதையே பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

ஜனநாயக படுகொலை...
எனவே, தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மேல்முறையீட்டுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதுடன், அவை மறுபரிசீலனைக்கும் பொது மக்களின் ஆய்வுக்கும் அப்பாற்பட்டவையாக மாறிவிடுகின்றன. அத்தகைய முடிவுகளால் நேரடியாகப் பாதிக்கப்படும் ஜனநாயக உரிமைகள் குறித்தும் கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பும் குறைகிறது. ஜனநாயகப் படுகொலை என்பது இங்கிருந்தே தொடங்குகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved