Also Watch
Read this
பிரிட்டனில் கோவிட் தொற்று பாதிப்பு மீண்டும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் சுமார் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. அங்கு பரவி வரும் 'ஸ்ட்ரேட்டஸ்' என்ற புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் குறித்த கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

கொரோனா தொற்று
பிரிட்டனில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் லண்டனில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் கோவிட் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது சுகாதாரத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் பாசிட்டிவ் விகிதம் 5.9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அறிகுறிகள் உள்ள அனைவரும் பரிசோதனை செய்து கொள்வதில்லை என்பதால், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

உருமாறிய வைரஸ்
தற்போது பரவி வரும் இந்த தொற்று, XFG என்ற உருமாறிய வைரஸ் வகையைச் சேர்ந்தது. இதற்கு 'ஸ்ட்ரேட்டஸ்' என்றும், அமெரிக்காவில் இது தீவிரமாகப் பரவியதால் 'அமெரிக்கன் கோவிட்' என்றும் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதமே கண்டறியப்பட்ட இந்த வைரஸ், புதியது அல்ல என்ற போதிலும், தற்போது இலையுதிர்காலத்தில் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமான காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தலைவலி மற்றும் கடுமையான சோர்வு ஆகியவற்றுடன், இந்த ஸ்ட்ரேட்டஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரைப்பை மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகளும் கூடுதலாக ஏற்படுகின்றன.

சுகாதார துறைக்கு சவால்
இங்கிலாந்தில் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் கோவிட் தொற்றால் 7 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த எண்ணிக்கை உயர்வு உடனடியாகப் பெரிய ஆபத்து ஏதும் இல்லை என்பதையே காட்டுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், சாதாரண பருவகால காய்ச்சலும் இதனுடன் சேர்ந்து பரவுவது சுகாதாரத் துறைக்கு சவாலாக அமையலாம் என மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே தடுப்பூசி
பலரும் தங்களுக்கு இருப்பது சாதாரண காய்ச்சல் என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அது கோவிட் தொற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாலும், முந்தைய தொற்றுகளால் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியாலும் பெரும்பாலான மக்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

புதிய உருமாறிய வைரஸ்கள் வேகமாகப் பரவும் உயிரியல் தன்மையைக் கொண்டிருந்தாலும், மக்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் தீவிர பாதிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.

விழிப்புணர்வு தேவை
இருப்பினும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிக காய்ச்சல் இருப்பவர்கள் வெளியே செல்வதை தவிர்த்து ஓய்வெடுக்க வேண்டும் என்றும், லேசான இருமல் உள்ளவர்கள் முககவசம் அணிவது நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அச்சம் வேண்டாம்
தொற்றுப் பரவல் அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை என்றும்,

அடிப்படை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதே போதுமானது என்றும் இங்கிலாந்து சுகாதாரத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved