Also Watch
Read this
தமிழகத்தில், சினிமா பாணியில் தொடர் கொ*, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு பல்வேறு மாவட்டங்களைப் பதற வைத்து வந்த 9 பேர் கொண்ட பயங்கரக் கும்பலை, கோவை தனிப்படை போலீஸார் மகாராஷ்டிராவின் புனேவில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீசாருக்கு டிஜிட்டல் தண்ணி காட்டிய கும்பல் சிக்கியது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சினிமா பாணியில்...
’தங்களை தொட்டுப் பார்த்தால் நடப்பதே வேறு,’ என்று மிரட்டல் விடுத்த ரவுடி கும்பல் தான், தற்போது கூண்டோடு கம்பி எண்ணுகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு, கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி மாணவர்களின் அறைக்குள் புகுந்த ஒரு கும்பல், கத்தி முனையில் மிரட்டிப் பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து போலீஸார் மீது பெப்பர் ஸ்பிரே தூவிவிட்டு அந்த கும்பல், சினிமா பாணியில் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் கோவைக்கு...
கோவையில் இருந்து தப்பிய கும்பல், தேனி மாவட்டத்திற்குச் சென்று அங்கு காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து, மகளின் திருமணத்திற்காக வங்கியிலிருந்து மீட்டு, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 86 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றது.

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க, டெல்லிக்கு பறந்த கும்பல் அங்கு இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்து விட்டு, கடந்த மாதம் விமானம் மூலம் மீண்டும் தமிழகம் திரும்பியது. சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் ஜேசிபி ஆபரேட்டர் கண்ணனை கொடூரமாகப் படுகொ* செய்து விட்டு மீண்டும் தங்கள் குற்றக்கூடாரமான கோவைக்கே தப்பி வந்தது.

தனிப்படை தேடுதல்வேட்டை
அடுத்ததடுத்து கொ*, கொள்ளையில் ஈடுபட்ட இக்கும்பல் போலீசார் திசை திருப்புவதற்கு மாஸ் பிளான் போட்டது. தமிழகத்தில் இருந்துகொண்டே, வெளிநாடுகளில் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க தங்களது நண்பர்களைத் தொடர்புகொண்டு பேசி, காவல்துறையினரை அலைக்கழிக்க செய்து டிஜிட்டல் தண்ணி காட்டினர். தொடர்ந்து போக்குக் காட்டி வந்த இக்கும்பலை கூண்டோடு பிடிக்க, கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மகாராஷ்டிரா சென்ற தனிப்படை
இறுதியாக, குற்றவாளிகளின் செல்போன் எண்கள் மற்றும் நவீன கண்காணிப்புச் சாதனங்கள் மூலம், அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் பதுங்கியிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். உடனே மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை போலீஸார், புனேவில் பதுங்கியிருந்த கும்பலின் தலைவன் உட்பட 9 பேரை வளைத்துப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.

கோவை மத்திய சிறையில்...
கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை, சிவகங்கை திருபுவனம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்,

பட்டுக்கோட்டையை சேர்ந்த மனோஜ்குமார், திண்டுக்கல்லை சேர்ந்த முத்துப்பாண்டி, மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன், பூனை புவனேஸ், சிவகங்கையை சேர்ந்த அருண், மதுரையை சேர்ந்த ராமர், திண்டுக்கல்லை சேர்ந்த மியாவ் கோபி எனும் கோபிநாத் என்பது தெரிய வந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved