news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "அடிமைக் கூட்டத்திற்கு எரிச்சல்"
tv

Also Watch

tv

Read this

"அடிமைக் கூட்டத்திற்கு எரிச்சல்"

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக அரசின் திட்டங்களைப் பார்த்து அடிமைக் கூட்டத்திற்கு எரிச்சல் ஏற்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வேட்பாளர்களை ஆதரித்து, வாக்கு சேகரித்தார்.

திருவாரூரில் மு.க.ஸ்டாலின்...
திமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
திருவாரூர் என்றால் அது திமுக ஊர். அதனால் நான் இங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். திமுக வேட்பாளர்கள்
திருவாரூர் - பூண்டி கே.கலைவாணன்
மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
திருத்துறைப்பூண்டி - இ.கம்யூ மாரிமுத்து
நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். உங்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க உங்களது பொன்னான வாக்குகளை, இவர்களுக்கு வழங்க வேண்டும்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து...
எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து, 2021ல் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தீர்கள். முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, பெண்கள், விடியல் பயணத்தில் கட்டணமில்லாமல் பயணிக்கத் தொடங்கி விட்டீர்களா, இல்லையா? அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமையை ஓரளவு சரி செய்த உடனே, பெண்களுக்கு உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயை ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு கொடுக்க தொடங்கி விட்டோமா, இல்லையா? அனைவரின் வங்கிக் கணக்கிற்கும் ஆயிரம் ரூபாய் சரியாக வருகிறதா, இல்லையா?

நான் முதல்வன் திட்டம்
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கினோம். 19 லட்சம் மாணவர்கள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள். நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் கல்வியில் சிறந்து, தலைசிறந்த வேலைகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக தொடங்கிய திட்டம் தான், ‘நான் முதல்வன் திட்டம்’. அந்தத் திட்டம் இன்றைக்கு ஹிட்டாகி, 48 லட்சம் திறன் சான்றிதழ்களை அவர்கள் வாங்கி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை, மகிழ்ச்சிப் பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று, ரூ.3,000 வழங்கினோம்.

ரூ.5,000 வழங்கினோம்
நம்முடைய ஹிட் திட்டங்களில், டிரெண்ட் - செட்டர் என்றால், அது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். நம்முடைய தமிழ்நாட்டைப் பார்த்து, பல மாநிலங்களும் உரிமைத் தொகை வழங்க தொடங்கி உள்ளனர். ஆனால், தேர்தலைக் காரணம் காட்டி இந்த உரிமைத் தொகையை நிறுத்த, பா.ஜ.க. திட்டம் தீட்டியது. அதனால் தான், பிப்ரவரி மாதமே, மூன்று மாதத்திற்கான உரிமைத் தொகையை முன்பணமாகவும், கோடைகால சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாயைச் சேர்த்து, ஐந்தாயிரம் ரூபாயை வழங்கினோம்.

உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன்
அனைத்து வகையிலும் தமிழ்நாடு டாப்பில் வந்திருக்கிறது. இது, பாஜக தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கு எல்லாம் எரிச்சலை உண்டாக்கி இருக்கிறது. அதனால், தமிழ்நாட்டை எப்படியாவது கலவர பூமியாக்கி விடலாம் என்று திட்டமிட்டு, ஏராளமான போலிச் செய்திகளைத் தொடர்ந்து பரப்பிப் பார்த்தார்கள். கலவர வெறியுடன் திரிந்த அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. அவர்கள் பரப்பியது அனைத்துமே அவதூறுதான் என்று உண்மை வெளிப்பட்டு, இன்றைக்கு மக்கள் முன்னால் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். தமிழ்நாடு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. அந்த பெருமிதத்தோடும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களோடு, வாக்கு கேட்டு உங்களைச் சந்திக்க, உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்று பெயர் சூட்டி உள்ளோம். இதெல்லாம் வாக்குறுதிகள் மட்டுமல்ல. திராவிட மாடல் 2.0-வில் நிச்சயம் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள்.

காப்பி அடித்து...
2011ல் இருந்து, 2021 வரைக்கும், தமிழ்நாட்டைப் பாழாக்கி, தலைகுனிய வைத்த அதிமுக, 2014ல் இருந்து இந்தியாவை மோசமான நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கும் பாஜகவிடம் சரணாகதி அடைந்து ஒரு கூட்டணி அமைத்து உள்ளது. அந்தக் கூட்டணியில், பாஜக கிளைச் செயலாளராக இருக்கிறார், அதிமுக-வை அழிவு பாதையில் அழைத்துச் செல்லும் இபிஎஸ். இப்போது அவர், நம்முடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து, புலம்பத் தொடங்கி உள்ளார். திராவிட மாடல் திட்டங்களைக் காப்பியடித்து, அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட இபிஎஸ், அவருடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து, காப்பி அடித்து விட்டோம் என்று புலம்புகிறார்.

புரிதல் இல்லை...
அவருக்கு எதைப் பற்றியும் புரிதல் கிடையாது, தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பதை தன்னுடைய உளறல்களால் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவரின் உளறல்களிலேயே ஹைலைட் எது தெரியுமா? “எப்படி உங்களின் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்?” என்று கேட்டால், “வரியை உயர்த்தி நிறைவேற்றுவோம்” என்று சொல்கிறார். பழனிசாமியால் மட்டும்தான், இப்படி எல்லாம் சிந்திக்க முடியும். அதனால்தான், அந்தளவிற்கு பழனிசாமியை, ஈஸியாக மிரட்டி, தங்களின் அடிமைக் கூட்டணியில் பாஜக வைத்திருக்கிறது.


தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை
என்டிஏ கூட்டணிக்கு ஒரே ஒரு நோக்கம்தான், தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மாடல் ஏற்படுத்தி இருக்கும் இந்த வளர்ச்சியை அழிக்க வேண்டும். இதுதான், என்டிஏ கூட்டணியின் நோக்கம். அந்த கூட்டணியின் தலைமையாக இருக்கும் பாஜகவிற்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று, அதிமுகவை விலைக்கு வாங்கியிருக்கிறது. பொதுவாக, பாஜகவைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யாது. ஆனால், தேர்தல் வந்துவிட்டது என்றால், கண் துடைப்பிற்காக பட்ஜெட்டில் சில அறிவிப்புகளைக் கொடுப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு அதைக்கூட செய்ய மனமில்லாத, வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் என்டிஏ. பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ததில்லை. எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை. நாம் வைத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. மதுரையில் ஒரு எய்ம்ஸ் அறிவித்தார்கள். அதன் நிலைமையை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை.

தமிழ்நாடு அணி vs டெல்லி அணி
இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்று, நம்முடைய வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக்கூட இதுவரைக்கும் தரவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? என்டிஏ கூட்டணியை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும். அப்போது தான், தமிழ்நாட்டின் எதிர்காலம் காப்பாற்றப்படும். இந்த தேர்தல், தமிழ்நாடு அணி vs டெல்லி அணி. தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், திமுக ஆட்சியில் தொடர வேண்டும். தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், பாஜக - அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்.

ஆதரிக்க வேண்டும்
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த மண்ணின் மைந்தனாக கேட்கிறேன், கருணாநிதியின் மகனாக கேட்கிறேன், உங்களின் பொன்னான வாக்குகளை, திமுக கூட்டணிக்கு நீங்கள் வழங்க வேண்டும். ஏப்ரல் 23 அன்று, வாக்களிக்கச் செல்லும் போது நீங்கள் சிந்திக்க வேண்டியது, ஒன்றே ஒன்றுதான். என்டிஏ கூட்டணியின் தமிழர் விரோத சந்தர்ப்பவாத கூட்டணியா? திமுக சாதனைகளின் தொடர்ச்சியா? என்பதைச் சிந்தித்து, வாக்களியுங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Link
நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்

6
42 mins agoshare
eps in sivakasibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved