திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த ஆவாரங்காடு பொன்னர் சங்கர் ஆலய திடலில் இன்று காலை 9.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றனர். முதலில் பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி,சோலையம்மாபட்டி,கீரணிப்பட்டி ஆகிய நான்கு ஊரைச் சேர்ந்த ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.அதனைத் தொடர்ந்து வாடி வாசலில் காளைகள் சீறிப் பாய்ந்தன. சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்கள் தொட்டு கூட பார்க்க முடியாத அளவிற்கு களத்தில் விளையாடின. காளையர்களும் அதற்கு சமமாக காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் என்ற அடிப்படையில் களம் இறக்கப்பட்டடனர். போட்டியில் 600 மாடுகள் மற்றும் 275 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக திருச்சி, புதுக்கோட்டை,தஞ்சாவூர் , சிவகங்கை, மதுரை, கரூர் திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. வெற்றி பெற்ற காளையர்களுக்கும், காளையர் கையில் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் கட்டில், LED TV,சில்வர் பாத்திரங்கள்,ஃபேன், போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையிலான 194 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் மருத்துவ குழு, அவசர ஊர்தி ,காளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க கால்நடை துறையினரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதையும் படியுங்கள் : "மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்"