Also Watch
Read this
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தென்காசியில் உள்ள 5 தொகுதிகளும் அதிமுகவின் கோட்டை என கூறியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்திருப்பதாகவும், திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில் ஊழல் தான் செய்ய முடியும் எனவும் விமர்சித்தார்.

தென்காசியில் இபிஎஸ் வாக்கு சேகரிப்பு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
அதிமுக ஆட்சியில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினோம். நாங்கள் உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.10,000 செலுத்துவோம். அனைத்து குடும்பத்துக்கும் பிரிட்ஜ் வழங்குவோம்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்குவோம். பணிக்கு செல்லும் பெண்களுக்கு 5 லட்சம் இரு சக்கர வாகனங்கள் ரூ.25,000 மானியத்துடன் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 எரிவாயு சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்து உள்ளது. திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில் ஊழல் தான் செய்ய முடியும்.

பயிர்க்கடனை தள்ளுபடி செய்வோம்
அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். பொய் சொல்லி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்த தேர்தலில் பதிலடி தர வேண்டும். திமுகவில் ஆட்களே இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் திமுகவில் அடைக்கலம் புகுந்து உள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 19 பேர், திமுகவில் போட்டியிடுகின்றனர். இந்த செல்லாத ஓட்டுகளால் எந்த பயனும் இல்லை. அதிமுக சொந்தக்காலில் நிற்கிறது. மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால், கூட்டணியை நம்பி திமுக உள்ளது. தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் இடையே தான் போட்டி என்று ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கிறதா, டெல்லியில் நடக்கிறதா?

எதிரி திமுக தான்
எங்களுக்கு எதிரி திமுக தான். மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவோம். இந்த தேர்தல் திமுகவுக்கு கடைசி தேர்தல். திமுக என்றால் கருணாநிதி குடும்பம் மட்டுமே. இந்த குடும்ப ஆட்சி தேவையா?. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த முறை திமுகவுக்கு மக்கள் நிச்சயமாக தகுந்த பாடத்தை புகட்டுவர். தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved