திமுகவுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள நெருக்கம் தான் சிலரை தூங்க விடாமல் செய்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், விரக்தியின் உச்சிக்கு சென்று நாள்தோறும் அவதூறு செய்திகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தென்காசியில், ரூ.141 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.291 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தூறலும், சாரலும் கொண்டு மக்களை குளிர்விக்கும் மண் தென்காசி. வடக்கே காசி என்றால், தெற்கே தென்காசி. தென்காசி கோயில் கும்பாபிஷேகம், 19 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரசில் தான் நடைபெற்றது.தமிழகத்தை அனைத்து வகையிலும், அனைத்து துறைகளிலும் முன்னேற்றி வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம். திமுக ஆட்சியில், வேளாண்மை உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தின், ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திலும் நாள்தோறும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இது எதுவும் தெரியாமல், இபிஎஸ் பேசி வருகிறார். திராவிட மாடல் அரசுடன், மக்களுக்கு இருக்கிற நெருக்கம் தான் பலரை தூங்க விடாமல் செய்துள்ளது. அதனால் தான், நாள்தோறும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதிலும், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார். விரத்தியின் உச்சியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவரின் வரலாறே அது தான்.மக்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி. மக்களை காக்கவே இந்த ஆட்சி. மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி. இந்த நான்கையும், நான்காண்டு காலமாக செய்து வருகிறோம். நாங்கள் எப்போதும் மக்களை நினைத்து ஏங்குவதால் தான் மக்களாகிய நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மூலம் ஓட்டுகளை திருட பாஜக முயற்சிக்கிறது. ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை தான் அதை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். வாக்கு திருட்டு போன்ற பாஜகவின் முயற்சிகளை முறியடிப்போம். தமிழக மக்களின் வாக்குரிமையை காப்போம். பாஜக திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. வேறுபாடுகளை கடந்து அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும். தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.37,000 கோடி நிதியை மத்திய பாஜக அரசு கொடுக்க மறுக்கிறது. அதனைக் கொடுத்தால் தமிழகம், வளர்ச்சி அடைந்துவிடும் என்பதால் தான். ஆனாலும் திமுக அரசு மக்களை காக்கும். மக்களைக் காக்க திமுக அரசுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை. பேரிடர் நிதியை கூட மத்திய அரசு தரவில்லை. மத்திய பாஜக அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதையும் கேளுங்கள்... "வடக்கே ஒரு காசி, தெற்கே ஒரு தென்காசி" முதல்வர் அதிரடி பேச்சு | CM Stalin speech | Tenkasi