Also Watch
Read this
By: Manigandan Raja

சாலை விரிவாக்கம் என ஆக்கிரமிப்பு :
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 150 ஆண்டுகள் பழமையான கல்வி நிலையமாக திகழ்கிறது. இந்த பள்ளி அமைந்துள்ள நிலத்தை ஜவான்மல் ஜுக்ராஜ் என்ற தானதர்மி அந்நாளில் பள்ளி வளர்ச்சிக்காக தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த பள்ளிக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள விளையாட்டு மைதானம் பல தலைமுறைகளாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இளைஞர்களின் கனவுகளையும் திறமைகளையும் வளர்த்த மண்ணாக இருந்து வருகிறது.
கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த மைதானத்தில் பயிற்சி பெற்று பல சாதனைகள் புரிந்துள்ளனர்.
அதேபோல் இந்த மைதானத்தில் விளையாடிய பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பள்ளிக்கும் பகுதியுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
விளையாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்த மைதானம் சுற்றுவட்டார மக்களுக்கு முக்கிய நடைப்பயிற்சி மையமாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் இங்கு கூடிவிட்டு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எண்ணூர் – மகாபலிபுரம் நெடுஞ்சாலை திட்டத்தின் காரணமாக இந்த பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் முழுவதும் சாலை விரிவாக்க பணிக்காக
அரசு கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை எதிர்த்து இன்று பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து “விளையாட்டு மைதானத்தை காப்பாற்ற வேண்டும் – மாற்று மைதானம் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை பதிவு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த விளையாட்டு வீரர்கள் கூறுகையில்,
“எங்கள் முன்னோர்கள் இந்த மைதானத்தில் விளையாடி சாதனை படைத்தவர்கள். இன்று அதே மைதானத்தில் நாங்கள் விளையாடி வருகிறோம்.
இந்த மைதானம் தான் எங்கள் பகுதியிலுள்ள இளைஞர்களை தவறான பாதைக்கு செல்லாமல் காக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாக உள்ளது. இன்றைய நவீன காலத்தில் பல இளைஞர்கள் செல்போன்களுக்கு அடிமையாகி தங்களது நேரத்தையும் திறமையையும் வீணாக்கி வருகின்றனர்.
ஆனால் இந்த மைதானம் மட்டும் இளைஞர்களை அந்த பழக்கத்திலிருந்து விலக்கி விளையாட்டின் மூலம் ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட
வாழ்க்கையை உருவாக்கி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் பல தலைமுறைகளின் நினைவுகளையும், பல இளைஞர்களின் கனவுகளையும் தாங்கி நிற்கும் இந்த மைதானம் சாலை விரிவாக்கத்தால் மறைந்து போகும் நிலை ஏற்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
எப்படி அரசு வீடுகளை கையகப்படுத்தும் போது மாற்று இடம் வழங்குகிறதோ, அதேபோல் இந்த விளையாட்டு மைதானத்திற்கும் மாற்றாக அருகிலேயே புதிய மைதானம் அமைத்து
இளைஞர்களின் எதிர்காலத்தை காக்க வேண்டும்” என்று அவர்கள் மனவேதனையுடன் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved