Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில், 60 சதவீதம் பேர் அரசு நடத்தும் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். இந்த பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலை அதிக வீழ்ச்சி கண்டுள்ளது. 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல், கழித்தல்களைக் கூட செய்ய இயலவில்லை. தமிழகத்தில் அரசுப்பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது.
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது மனதை கலங்கச் செய்கிறது. அன்றாடம் 65 தற்கொலைகள் நடப்பதாக, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் பயன்பாடு, இளைஞர்கள் மத்தியிலே கடுமையாக அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்து வரும் போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை மிக, மிக அதிக கவலையை அளிக்கின்றன. இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன், சக்தி படைத்தவர்கள் செயல்படுவதால், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறார் பாலியல் சம்பவங்கள் (போக்சோ) அதிகரிப்பதைக் காண முடிகிறது. நமது சகோதரிகளும் மகள்களும் வீட்டை விட்டு வெளிவர அச்சப்பட்டும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். வீடுகளை விட்டு வெளியே வர அவர்கள் அச்சப்பட்டால், அது நமது எதிர்காலத்தின் மீது இருண்ட நிழலைப் படரச்செய்து விடும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் வன்முறைகளில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது மற்றும் இரும்புக்கரம் கொண்டு கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved