news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அதிமுகவில் அடுத்த விக்கெட், விலகினார் MGR விசுவாசி செம்மலை
tv

Also Watch

tv

Read this

அதிமுகவில் அடுத்த விக்கெட், விலகினார் MGR விசுவாசி செம்மலை

திடீர் விலகலுக்கான பின்னணி என்ன?

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம், அதிமுகவில் புயலை கிளப்பி வரும் நிலையில், சேலத்தில் முக்கிய புள்ளியாக இருந்த முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியில் இருந்தே விலகியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா? என உருக்கமாக அறிக்கை வெளியிட்டு அதிமுகவுக்கு முழுக்கு போட்டிருக்கும் நிலையில், திடீர் விலகலுக்கான பின்னணி என்ன?

தவெக vs அதிமுக
விஜய்யின் அரசியல் எழுச்சி எதிர்பார்த்தபடியே அதிமுகவை அசைத்து பார்த்து விட்ட நிலையில், அடுத்தடுத்து நிகழும் குழப்பங்களும், நிகழ்வுகளும் ரத்தத்தின் ரத்தங்களை தூக்கமிழக்கச் செய்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து தொடர்ச்சியாக விவாதிக்கப்படும் விஷயமாக மாறியிருக்கிறது அதிமுகவின் எதிர்காலம். அதிமுகவில் ஒரு தரப்பினர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளித்த நிலையில், இன்னொரு தரப்பினர் எதிராக இருக்கின்றனர்.

இபிஎஸ் Vs சிவிஎஸ்
குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவை மீறி அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். இந்த விவகாரம் அதிமுகவில் சூறாவளி போல சுழன்ற நிலையில், தனது உத்தரவை மீறி ஆதரவு அளித்த மூத்த நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இரு தரப்பினரும் கொறடாவை தேர்வு செய்து சபாநாயகருக்கு மனு அளித்திருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சேலத்தில் இருந்து...
இந்த நிலையில், சேலம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக முக்கிய முகமாக இருந்த முன்னாள் அமைச்சர் செம்மலை, கட்சியை விட்டு விலகுவதாக பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் செம்மலை, தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை கொடுக்கிறது எனவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிநடத்திய கட்சிக்கு இந்த கதியா? என ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

மனம் இடம் தரவில்லை
கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா? என உருக்கமாக பதிவிட்டுள்ள செம்மலை, எல்லாரும் பரிகாசம் செய்யும் அளவுக்கு அதிமுகவின் நிலைமை ஆகி விட்டது என வேதனையை பகிர்ந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தனக்கு பல இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, தடுக்கப்பட்ட போதிலும் ஆதங்கத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் கட்டுப்பட்டு பணியாற்றி வந்ததாக கூறியுள்ள செம்மலை, தற்போது உருவாகியிருக்கும் சூழல்களை பார்த்து அதிமுகவில் பயணிக்க மனம் இடம் தரவில்லை என கூறியுள்ளார்.

அதிமுக இயக்கத்தில்...
எம்ஜிஆர்- ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வந்த செம்மலை இப்போது அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். 1980ஆம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆன செம்மலை, அடுத்த தேர்தலில் அதிமுகவில் இணைந்து போட்டியிட்டார். 2001ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் செம்மலை. 2009ஆம் ஆண்டு சேலம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக சார்பில் எம்பி ஆன செம்மலை, 2016 சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் வெற்றி பெற்று, தற்காலிக சபாநாயகர் பொறுப்பிலும் இருந்தார்.

இபிஎஸ் உடன்...
கொங்கு மண்டலத்தில் இருக்கும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் செம்மலையும் ஒருவர் என்ற நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு இணக்கமாக இருந்து வந்தார். சேலம், சென்னை என எடப்பாடி பழனிசாமி எங்கு பிரஸ் மீட் நடத்தினாலும் செம்மலையும் உடனிருப்பார். தற்போது மூத்த நிர்வாகியாக இருக்கும் செம்மலையின் விலகல் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் மேலும் சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் மீண்டும் குழப்பம்
விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை, தவெகவுக்கு ஆதரவு அளிப்பதோ, வேண்டாம் என மறுப்பதோ சந்தர்ப்ப சூழலை வைத்து எடுக்கும் முடிவு தான் என்றதோடு, எந்த முடிவாக இருந்தாலும் கலந்து பேசி எடுக்க வேண்டும் என்றார். தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி கடுமையாக உழைத்ததாக கூறிய செம்மலை, அழைத்து பேசி ஒரு மித்த முடிவை எடுக்காமல் மீண்டும் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சூழல் இருக்கிறது எனவும் பொடி வைத்து பேசினார்.

அதிமுகவில் இருந்து விலகல்
தேர்தலுக்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்த நிலையில், அப்போதே, செம்மலைக்கு திமுக வலை வீசியிருக்கிறது. எ.வ.வேலு மூலமாக செம்மலையை திமுகவுக்குள் இழுக்கும் முயற்சி நடந்ததாக கூறப்படும் நிலையில், அவர் திமுகவுக்கு இசைவு கொடுக்கவில்லை என சொல்லப்பட்டது. இந்த சூழலில் அதிமுகவில் நடக்கும் குழப்பங்களை காரணம் காட்டி கட்சியை விட்டே விலகியிருக்கிறார் செம்மலை என்பது குறிப்பிடத்தக்கது.


Related Link
எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் வீழும் அதிமுக?

எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் வீழும் அதிமுக?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை - சி.வி.சண்முகம்

4
36 mins agoshare
தவெக உடன் கூட்டணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved