Also Watch
Read this
By: Manigandan Raja

ரயில் பாதையில் போலீசார் குவிப்பு :
பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கமுதக்குடி கிராமம் அமைந்துள்ளது.
இங்கு சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு மதுரை - பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது கமுதக்குடியில்
பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட் மூடப்பட்டு நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது.
அதன் பின் கமுதக்குடி கிராமத்திற்கு செல்வதற்கு சுரங்கப்பாதையோ அல்லது மாற்று பாதையை ரயில்வே நிர்வாகம் செய்து தரப்படவில்லை. இதனால் கமுதகுடி கிராம மக்கள் சுமார் ஆறு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளி செல்லும் மாணவ - மாணவிகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். கமுதக்குடி கிராமத்தில் ரயில்வே கேட் அமைத்து தர பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.
இதனை அடுத்து கமுதகுடி கிராமத்திற்கு நிரந்தரமாக ரயில்வே கேட் அமைக்க வேண்டும் அல்லது மாற்று பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கமுதக்குடி கிராமத்தில் ADSP தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.கிராம மக்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டு மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை செய்ய சென்றுள்ளனர்.
தொடர்ந்து கமுதக்குடி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மறியல் போராட்டம் காரணமாக கமுதக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved