Also Watch
Read this
Posted on: Feb 26, 2026 07:07 AM
By: Fyrose Banu

பாபநாசம் அருகே கணவன் வாங்காத கடனுக்காக மனைவியின் மகளிர் உரிமைத்தொகையை வழங்க மறுத்து கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி செய்த செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை எடுப்பதற்கும், கணவர் பெயரில் முறைகேடாக வங்கிக் கடன் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
கணவர் பெயரில் முறைகேடாக வங்கிக் கடன்
பாபநாசம் அருகே நெடுந்தெரு மாதாகோவில் தெருவில் வசிப்பவர் ரிக்ஸல் ரூஸ்வெல்ட் மேரி (45) இவருக்கு தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை பாபநாசத்தில் இயங்கும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் வரவு வைக்கப்பட்டு பெற்று வந்த நிலையில் கடந்த 2024 -ஆம் ஆண்டு மகளிர் உரிமைத்தொகை எடுப்பதற்காக வங்கிக்கு சென்ற போது உங்களது கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர். பலமுறை வங்கிக்கு சென்றும் பணம் எடுக்க முடியாததால் வங்கி மேலாளரிடம் இதுகுறித்து கேட்டபோது, உங்கள் கணவர் ஸ்டீபன் எங்கள் வங்கியில் கடன் பெற்றுள்ளார். அதன் நிலுவைத் தொகை சுமார் 55-ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. அதை கட்டிய பிறகுதான் உங்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகையை எடுக்க முடியும் என கூறியதாக தெரிய வருகிறது.
மகளிர் உரிமைத் தொகையை முடக்கிய வங்கி நிர்வாகம்
இதுகுறுத்து தனது கணவரிடம் கேட்டபோது கடன் பெற்ற விபரம் தனக்கு தெரியவில்லை எனவும் தான் திருமணத்திற்கு முன்பு இந்த வங்கியில் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியதை அரசு தள்ளுபடி செய்து விட்டதாகவும் வங்கியில் அப்போது இருந்த வங்கி மேலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் மேற்கொண்டு எந்த கடனும் இந்த வங்கியில் வாங்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வங்கியில் தனது கணவர் பெயரில் முறைகேடாக கடன் வழங்கி வசூல் செய்வதற்காக தனது மகளிர் உரிமைத் தொகையை எடுக்க முடியாமல் முடக்கி வைத்துள்ளனர்.
வாங்காத கடனுக்காக பணத்தை பிடித்தம் செய்த வங்கி
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர் நலனுக்காக தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை தன் கணவர் வாங்காத கடனுக்காக பிடித்தம் செய்து வைத்து வங்கி தரப்பில் தர மறுப்பதாக பாதிக்கப்பட்ட ஸ்டீபனின் மனைவி வங்கியின் மீது குற்றம் சாட்டியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக மகளிர் உரிமைத்தொகையை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது கணவர் பெயரில் முறைகேடாக வங்கி கடன் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved