Also Watch
Read this
By: Manigandan Raja

பாறை மீது மோதி விபத்து :
ஏற்காடு மலைப்பாதையில் பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாறையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள வெள்ளகடை கிராமத்திலிருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று கருமந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை கரடியூர் பகுதியைச் சேர்ந்த சின்ன வருதையான் என்பவரின் மகன் தனுஷ் (21) என்பவர் ஓட்டிச் சென்றார்.
வேன் ஏற்காடு கொட்டச்சேடு கிராமம் அருகே உள்ள ஒரு கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலை ஓரத்தில் இருந்த பாறையில் வேன் பலமாக மோதி நின்றது.
வளைவில் வேன் கவிழாமல் பாறையில் மோதி நின்றதால், உள்ளே இருந்த 20 பயணிகளும் பெரும் அசம்பாவிதம் இன்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இருப்பினும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு போலீசார், விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டுநர் தனுஷிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமா? அல்லது வளைவில் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் போக்குவரத்துப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved