Also Watch
Read this
By: Fyrose Banu

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விடுதி காப்பாளர் உட்பட 4 பணியாளர்களை அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வாழப்பாடி சமூக நீதி விடுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த ராதிகா என்பவரின் ஆண் நண்பர் ரகுபதி, அடிக்கடி விடுதிக்கு வந்து சென்றுள்ளார். அதற்கு விடுதி சமையலர் கலைச்செல்வி மற்றும் பிற ஊழியர்களும் ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று சமையலர் கலைச்செல்வி மற்றும் துப்புரவு பணியாளர் ராதிகா ஆகியோர் இரு சிறுமிகளை வெளியே அனுப்பி, ரகுபதி மூலம் மதுபானம் (பீர்) மற்றும் உணவுப் பொருட்களை வாங்கியுள்ளனர். பின்னர் விடுதியில் உள்ள குடிநீர் டேங்க் அருகே வைத்து, குளிர்பானத்தில் மதுவைக் கலந்து இரு சிறுமிகளுக்கும் ராதிகா கொடுத்துள்ளார். சிறுமிகள் போதையானதும், வெளியில் காத்துக்கொண்டிருந்த ரகுபதி அவர்களை அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வெளியில் கூறினால் ஆபத்து என சிறுமிகளை
ராதிகா மிரட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சிறுமியைச் சந்திக்க வந்த உறவினரிடம், தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்துச் சிறுமி தெரிவித்துள்ளார். உறவினர் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துப்புரவு பணியாளர் ராதிகா மற்றும் அவரது கள்ளக்காதலன் ரகுபதி மீது போக்சோ சட்டம் மற்றும் சிறுவர் நீதிச் சட்டப் பிரிவுகளின் கீழ் (Crime No. 25/2026, U/S 9(o) r/w 10, 17 POCSO Act & Sec 77 JJ Act) வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் ஆகஸ்ட் 17 அன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ், கடமை தவறிய மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட 4 விடுதி ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்
விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவியரின் அச்சத்தைப் போக்கவும் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று மாவட்ட குழந்தைகள் அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மற்றும் ஆற்றுப்படுத்துனர் குழுவினர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மாணவியருக்குச் சுய பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைகள், அவசரக் கால புகார்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு உரிய மனநல ஆற்றுப்படுத்துதல் அளிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved