Also Watch
Read this
பேசுவதற்கு கண்டெண்ட் இல்லாமல் கண்டதையும் பேசி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை ஏலம் எடுத்து முதலமைச்சர் ஆனவரை அரசியலில் இருந்தே தூக்கி எறிய வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

சீர்காழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சீர்காழியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்து உள்ளோம். முதலில் இல்லத்தரசி திட்டம். முதல் பந்தே சிக்சர் தான். இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப்போகிறோம். எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன். இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புது பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்டை வாங்கிக் கொள்ளலாம். என்னென்ன பொருள்? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி. கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு – இதில் எதை வாங்கலாம் என்று இப்போதே பெண்கள் எல்லாம் ஆலோசனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, நம்முடைய குடும்பத் தலைவிகளின் வீட்டு வேலை சுமை குறைய வேண்டும். அதற்காகத்தான் இந்தத் திட்டம்.

கண்டென்ட் இல்லாமல் கண்டபடி பேச்சு
எப்படி கருணாநிதி சொன்னபடியே கலர் டிவியும், கேஸ் அடுப்பும் கொடுத்தாரோ? அவரது மகனான நானும், சொன்னபடியே இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன். தமிழகத்தில் பல்வேறு சாதனைகள், அனைவருக்கும் நன்மைகளை செய்து தந்துவிட்டு, கம்பீரமாக, தெம்புடன், திராணியுடன் உங்களிடம் நான் ஆதரவைக் கேட்கிறேன். ஆனால், இப்படி பேசுவதற்கு எந்த கண்ட்டென்டும் இல்லாமல், கண்டதையும் பேசும் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி வலம் வந்து கொண்டிருக்கிறார். நாள்தோறும் கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது அல்லவா, அதில், தி.மு.க. கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை கூட, தோல்வி பயத்தில் பழனிசாமியின் தரம் கீழே கீழே இறங்கிக் கொண்டே போகிறது.

திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்காத பழனிசாமி, வேறு எதற்காகத் தான் பேசுவார்? தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருப்பதால் தான், தொகுதி மறுவரையறை பற்றி பா.ஜ.க. அரசு அறிவிப்பதற்கு முன்பே விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தினோம்.

நடைபெறப் போகும் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான தேர்தல். இந்த தேர்தலில் திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு பேசி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved