கூட்டணி கட்சியான CPI -ன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுடன் செய்து கொண்ட பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்துள்ளது. இடது ஜனநாயக முன்னணியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு முரணாக பிஎம்ஸ்ரீ திட்டத்தில் பினராயி விஜயன் அரசு கையெழுத்திட்டதற்கு முக்கிய கூட்டணி கட்சியான CPI கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன் ஒரு கட்டமாக அமைச்சரவையில் உள்ள தனது இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் எனவும் CPI அறிவித்தது. இதை அடுத்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன் அதை மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளார்.