Also Watch
Read this
By: Manigandan Raja

சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடும் போலீஸ் :
பஞ்சாப் மாநிலம் தரன் தரன் ((Tarn Taran)) மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடையாளம் தெரியாத சுமார் 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து கண்ணாடிகளை உடைத்து, நாற்காலிகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியதோடு, அங்கு இருந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடியது.
புரி கடற்கரையில் கடல் நீரை மேகம் உறிஞ்சிய அரிய நிகழ்வு :

ஒடிசா மாநிலம் புரி மாவட்டம் அஸ்தரங்கா கடற்கரையில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய நிகழ்வை பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர். வானத்தில் இருந்து யானையின் தும்பிக்கை போல மேகம் திரண்டு வந்து கடல் நீரை உறிஞ்சியது. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய, வீடியோ வைரலாகி வருகிறது.
குடியிருப்பு, வணிக வளாகம் பகுதியில் பயங்கர தீ விபத்து :

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஹர்னாக் பகுதியில் குடியிருப்பு மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அமைந்துள்ள பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. எனினும், தீவிபத்தில் 3 வீடுகள் தீக்கிரையானதோடு, வணிக வளாகமும் பாதிக்கப்பட்டது.
2-ஆவது கடன் தொகையை செலுத்திய மாலத்தீவு அரசு :

இந்தியாவிடம் இருந்து கடனாக பெற்ற 150 மில்லியன் டாலர் கடன் பத்திரங்களில், 2-ஆவது தவணையாக 50 மில்லியன் டாலர் மதிப்பிலான கருவூல ரசீது தொகையை திருப்பிச் செலுத்திவிட்டதாக மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது. மேலும், மீதமுள்ள 50 மில்லியன் டாலர் செப்டம்பர் 17-ஆம் செலுத்தப்பட உள்ளதாகவும் மொய்சூ தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இருந்து மணாலிக்கு சுற்றுலா சென்றபோது விபத்து :
ஹிமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளின் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்தனர். குஜராத்தை சேர்ந்த 10 பேர், இன்னோவா காரில் மணாலியில் இருந்து டல்ஹவுசி நோக்கி சென்றனர். சம்பா மாவட்டம் லாஹ்ரு - துன்னுஹட்டி சாலையில் வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆயிரம் அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved