Also Watch
Read this
அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு அணிக்கு இடமில்லை என்று, தவெக தரப்பில் கூறி இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தகவல் தெரிவித்து உள்ளார். தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து, கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளார்.
கலந்து பேசி முடிவு
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். நாங்கள் வேறொரு கூட்டணியில் பங்கேற்று போட்டியிட்டோம். அதனால், மற்றொரு கூட்டணி அரசில் இணைவது குறித்து ஆலோசிப்போம். எங்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சிலர் அவதூறுகளை பரப்பினார்கள்.

அவதூறு பரப்பினர்
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் அழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரின் அழைப்புக்கு மதிப்பு தெரிவிக்கிறோம். இந்த அழைப்பை நிராகரிக்க முடியாது. எல்லோருக்குமானவர் அம்பேத்கர் நூல் விழாவிலேயே விஜய் விடுதலைச்சிறுத்தைகளை வெளிப்படையாக அழைத்தார். அது எங்களை அழைத்ததற்கான செய்தியாக தான் பார்த்தோம். அப்போது தவெக கூட்டணியில் இணையும் சூழல் உருவாகவில்லை. வேளச்சேரியில் முதல்வர் விஜய் என்னை நேரில் சந்தித்தபோது அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அழைப்பு விடுத்தார். தவெக கூட்டணியில் நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை. திமுக கூட்டணியில் இடம்பெற்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

நிபந்தனையற்ற ஆதரவு
தவெக ஆட்சி அமைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவளித்தோம். அமைச்சரவையில் பங்கு கொடுத்தால் தான் ஆதரவு என்பதில் உடன்பாடில்லை. அதனால், நிபந்தனையுடன் ஆதரவளிக்கவில்லை. முன்பு கம்யூனிஸ்ட்கள் எடுத்த அதே நிலைப்பாட்டை எடுத்தோம் இப்போது அவர்கள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதால், ஏன் முடிவு செய்யவில்லை என்று எங்கள் கட்சியினர் கேள்வி எழுப்பக் கூடும். தவெகவின் அழைப்பை ஏற்று எங்கள் முடிவு குறித்து மீண்டும் கலந்தாலோசிப்போம், கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்.

அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை
அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக தரப்பில் கூறப்பட்டு உள்ளது; அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடமளித்தால், ஆதரவு குறித்து மறு பரிசீலனை செய்வோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved