மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற சிறிய ரக விமானம் வெடித்து சிதறி, தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி, கண்கலங்க வைத்திருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவசரமாக தரையிரங்க முயன்ற சிறிய ரக விமானம் வெடித்து விபத்தில் சிக்கியது எப்படி? கண் இமைக்கும் நேரத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.கிங் மேக்கராக வலம் வந்த அஜித் பவார்ஐந்து முறை துணை முதலமைச்சராக சுமார் ஒன்பது ஆண்டுகள் அந்த பதவியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கிங் மேக்கராக வலம் வந்த அஜித் பவார், விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது மராட்டிய மக்களை சோக கடலில் தவிக்க விட்டிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், மும்பையில் இருந்து பாராமதிக்கு பொதுக் கூட்ட நிகழ்வில் கலந்து கொள்ள சிறிய ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். விமானத்தில் அஜித் பவாரின் உதவியாளர், பாதுகாவலர், விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் பயணித்த நிலையில், பாராமதிக்கு அருகே விமானம் வந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பாராமதி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த விமானத்தை, முன்கூட்டியே திடல் ஒன்றில் அவசரமாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஓடுதளத்தில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் அமைந்துள்ள மைதானம் போன்ற அந்த இடத்திலேயே விமானம் விழுந்து இரண்டாக நொறுங்கிய நிலையில், அடுத்த நொடியே தீப்பிடித்து எரிந்திருக்கிறது. அதிர்ச்சி தரும் சிசிடிவிஅக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விமானத்தில் இருந்தவர்களை மீட்க முயற்சி செய்த போதிலும், கொளுந்து விட்டு எரிந்த தீயில் இருந்து மீட்க முடியாமல் போயிருக்கிறது. நடுவானில் இருந்து தரையை நோக்கி வந்த விமானம், கீழே விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்த நிலையில், பயங்கர சத்தத்துடன் கரும்புகை மேலெழுந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி அரசில் துணை முதலமைச்சர்இந்தநிலையில், விமானத்தில் பயணித்த அஜித் பவார் உள்ளிட்ட 5 பேரும் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவின் தலைவராக, மகாராஷ்டிரா அரசியலின் முக்கிய முகமாக இருந்த அஜித் பவாரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மூத்த முன்னோடி அரசியல்வாதி சரத்பவாரின் அண்ணன் ஆனந்த் ராவ்-ன் மகன் தான் அஜித் பவார். முதலில் சரத் பவாருடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்த அஜித் பவார், பின்னர் சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் கருத்து முரண் ஏற்பட்டு தனித்து செயல்பட தொடங்கினார். சரத் பவார் தொடங்கிய தேசிய வாத காங்கிரஸ் கட்சியை தேர்தல் ஆணையம் மூலம் தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட அஜித் பவார், பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் இடம் பிடித்து துணை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.ஐந்து முறை துணை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வர் பதவியில் இருந்த அஜித் பவார், தாக்கரே ஆட்சி கவிழ்ந்து ஏக்நாத் ஷிண்டேவை வைத்து பாஜக ஆட்சி அமைத்த போதும், பாஜகவுக்கு ஆதரவு அளித்து அப்போதும் துணை முதலமைச்சர் நாற்காலியை தன்வசமாக்கிக் கொண்டார். அந்த வகையில், ஐந்து முறை துணை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பெருமைக்கு சொந்தக்காரர் அஜித் பவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநில அரசியலை தாண்டி தேசிய அரசியலிலும் அஜித் பவாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்ற நிலையில், சரத் பவாரிடம் இருந்து கட்சியை பிரித்து தனி அணி உருவாக்கினாலும் தனக்கான செல்வாக்கு குறையாமல் பார்த்துக் கொண்டார். ஆனாலும், அரசியல் பனிப்போரை கடந்து கடந்த சில மாதமாக சரத் பவார் குடும்பத்துடன் அஜித் பவார் இணக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான் கொடூர விபத்து மூலம் அஜித் பவாரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. முதன்முதலில் போட்டியிட்ட தொகுதி குறிப்பாக, தனது சொந்த தொகுதியான பாராமதி மண்ணிலேயே அஜித் பவாரின் உயிர் பிரிந்தது அந்த மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அஜித் பவாருக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே பாராமதி தொகுதி தான். அரசியல்வாதி என்பதை தாண்டி தொகுதி மக்கள் எல்லாரும் அஜித் பவாரை அண்ணன் என அழைப்பது தான் வழக்கம் என சொல்லப்படுகிறது. 1991ஆம் ஆண்டு பாராமதிக்கும், அஜித் பவாருக்கும் இடையே தொடங்கிய பந்தம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தது. அஜித் பவார் முதன்முதலில் போட்டியிட்ட தொகுதி பாராமதி தான். பின்னர் அதே பாராமதி தொகுதியிலேயே தொடர்ச்சியாக 8 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று சாதனை படைத்து மக்கள் ஆதரவை நிரூபித்து காட்டினார். அஜித் பவார் மூலமாக பாராமதி தொகுதியும் வளர்ச்சியை கண்டது. அஜித் பவாரை மாபெரும் அரசியல்வாதியாக மாற்றி காட்டிய பாராமதி மண்ணிலேயே அவரது இறுதி சுவாசமும் அடங்கி போய் விட்டது. பாம்பார்டியர் லியர்ஜெட் 45 இது ஒரு பக்கம் இருக்க, அஜித் பவார் பயணித்த விமானம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. பாம்பார்டியர் லியர்ஜெட் 45 என்ற சிறிய ரக விமானத்தில் தான் அஜித் பவார் பயணித்திருக்கிறார். இதே ரக விமானம் கடந்த 2008ஆம் ஆண்டு மெக்சிகோவில் அவசரமாக தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில், விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதே மாதிரி, 2003ஆம் ஆண்டு பறவை மோதி டேக் ஆப் ஆன சிறிது நேரத்திலேயே விமானம் விபத்தில் சிக்கியது. இதில், விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். அதிகபட்சம் 8 அல்லது 9 பேர் பயணிக்க கூடிய அந்த விமானம் 9 ஆயிரத்து 752 கிலோ எடை கொண்டது.அஜித்பவாரின் கடைசி பதிவுகாலை 8.45 மணிக்கு அஜித் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியது என்ற நிலையில், விபத்தில் சிக்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் தனது எக்ஸ் வலைதளம் மூலமாக லாலா லஜபதி ராய் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தி பதிவு போட்டிருந்தார் அஜித் பவார். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே அஜித் பவாருக்கு நாடே அஞ்சலி செலுத்தும் சோகம் நிகழ்ந்திருக்கிறது. Related Link கடும் உச்சத்திற்கு சென்ற ஆபரணத் தங்கம்