Also Watch
Read this
தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். இதில், தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள், இடம் பெற்றுள்ளதா? திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டதா? மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

தவெக அரசின் முதல் பட்ஜெட்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில், முக்கிய அறிவிப்புகள் பல இடம் பெற்றிருந்தாலும், தேர்தல் அறிக்கையில் மக்களை கவர்ந்த திட்டங்கள் குறித்து எதுவும் சொல்லப்படாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்சியமைத்த மூன்றே மாதங்களில் தவெக அரசு 2026-27ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தொலைநோக்கு பார்வையுடன் நிதிநிலை அறிக்கையில் ஏராளமான அறிவிப்புகளும் திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

அண்ணன் சீர்திட்டம்...
குறிப்பாக, திருமணமாகும் பெண்களுக்கு பட்டுப்புடவையும் ஒரு சவரன் தங்க நாணயமும் வழங்கும் அண்ணனின் சீர் திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது மக்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ஹஜ் பயணிகளுக்கான மானியம், 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, மீனவர்களுக்கான மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை உயர்த்தியது போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தவெக வாக்குறுதிகள்
பள்ளி மாணவர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு, 100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் அமைக்கப்படும், தரமான கல்வி வழங்கும் உண்டு உறைவிடப் பள்ளிகள் போன்ற அறிவிப்புகளும் பட்ஜெட்டை மெருகூற்றின. இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி, வெற்றித் திறன் பயிற்சி திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்புறச் செய்யும் வகையிலான திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை போலவே, விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில், 50 ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும், விளையாட்டு வீரர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படும் போன்ற தவெக வாக்குறுதிகள் பெரும்பாலும் இடம்பெற்றிருந்தது.

எதிர்பார்த்த அறிவிப்புகள்
இதுதவிர, வீடுகளுக்கான 200 யூனிட் இலவச மின்சாரம், காலை உணவுத்திட்ட விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம் போன்ற தவெக வாக்குறுதிகள் பட்ஜெட்டுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டு சிலது மட்டும் நிறைவேற்றப்பட்டன. என்னதான் வகைவகையான திட்டங்கள் பட்ஜெட்டை அலங்கரித்தாலும், பாமர மக்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த 2,500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, ஆண்டுக்கு விலையில்லாமல் ஆறு சிலிண்டர், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை போன்ற திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved