Also Watch
Read this
முதலமைச்சர் ஜோசப் விஜய் பெயரில் போலி AI 'டீப் ஃபேக்' வீடியோவைப் பரப்பி மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் யார்? அவரின் பின்னணி என்ன?

வழக்கமான கண்காணிப்பின்போது...
தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்கமான இணையவழி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, முகநூல் பக்கங்களில் வீடியோ ஒன்று பரவியுள்ளது. அதில், முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி, இந்தி குரல் வடிவத்துடன் கூடிய போலி AI டீப்ஃபேக் வீடியோக்கள் இடம்பெற்றிருந்தன.

அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் நோக்கில் இந்த வீடியோக்கள் பரப்பப்பட்டு உள்ளது தெரிய வந்ததையடுத்து அந்த வீடியோக்களில் நிதி உதவி பெற ஒரு குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டிருந்தது.

முதல்வர் விஜய் பெயரில்...
இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், மோசடி கும்பல் போலி வீடியோக்களைப் பயன்படுத்தி மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்கிய போலீசார், தொடர்ந்து ஆதாரங்களை ஆய்வு செய்து, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசப் பகுதிகளில் சந்தேக நபர்களைக் கண்காணித்தனர். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ராஜஸ்தான் இளைஞர் கைது
இதன்படி ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில், முக்கிய குற்றவாளியான அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஷயாபு கான் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன், சிம் கார்டு மற்றும் கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்த போலீசார் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

சர்வதேச பின்னணி, விசாரணை
தொடர் விசாரணையில், இந்த மோசடியில் சிக்கிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்குமூலம் குற்றவாளிக்கு எதிரான வழக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

குற்றவாளி தனியாகச் செயல்பட்டாரா? அல்லது ஏதேனும் பெரிய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகச் செயல்பட்டாரா? என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற பல போலி வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து பகிரப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த சர்வதேச பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved