news-tamil-logo

3/15/2026, 10:56:43 AM

news-tamil-logo
more
Home news "காற்றில் கரைந்த கறைபடியா கரங்கள்"
tv

Also Watch

tv

Read this

"காற்றில் கரைந்த கறைபடியா கரங்கள்"

தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்

Posted on: Feb 26, 2026 05:25 AM

36

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டு அரசியலின் தன்னிகரற்ற தலைவரான தோழர் நல்லகண்ணு 101ஆவது அகவையில், தன்னுடைய மூச்சை நிறுத்திக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 80 ஆண்டுகளை கடந்தும், பொதுப்பணியாற்றி வந்த நல்லகண்ணு, தன் வாழ்நாளில் சந்தித்த பெரும் போராட்டங்களையும் இக்கட்டான சூழல்களையும் விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

எளிமை, நேர்மை, அப்பழுக்கற்ற அரசியல்
நூற்றாண்டு கால வாழ்வின் பெரும் பங்கை மக்கள் போராட்டத்திலும் சிறை கொடுமைகளிலும் கழித்த மாபெரும் தலைவர் நல்லகண்ணுவின் மரணச்செய்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
எளிமை, நேர்மை என அப்பழுக்கற்ற அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர் தான் தோழர் நல்லகண்ணு. கட்சியினரால் ஆர்.என்.கே. என அன்போடு அழைக்கப்படும் நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் மூன்றாவது மகனாக 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பிறந்தார். தீவிர வைணவ பற்றாளரான தந்தையினால், சைவத்தை மட்டுமே உண்டுவந்த நல்லகண்ணுவுக்கு பள்ளி ஆசிரியரான பலவேசம், பொதுவுடமை கருத்துகளையும் ஊட்டி வளர்த்துள்ளார். அதுமட்டுமின்றி பாரதியாரின் படைப்புகளும் திருவிகவின் எழுத்துகளுமே தன்னை பொதுவாழ்வில் செதுக்கியதாக நல்லகண்ணுவே பல இடங்களில் பகிர்ந்திருக்கிறார்.

1943ல் கம்யூ. கட்சியில் இணைந்த தோழர் நல்லகண்ணு
தந்தைக்கு தெரியாமலேயே எளிய மக்களுக்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நல்லகண்ணு, மாணவராக இருந்த போதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மாணவர்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட அந்த மகத்தான மனிதரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரவணைத்துக் கொண்டது. 1943ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தோழர் நல்லகண்ணு, தன் இறுதி மூச்சு இந்த மண்ணில் இருந்து விடுபடும் வரையிலும் செஞ்சட்டைக்காரராகவே வாழந்தார்,

மீசையை பொசுக்கி...
ஆயுதம் தாங்கிய போராட்டம் தான் புரட்சிக்கு வித்திடும் என நம்பிய நல்லகண்ணு உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தை முன்னெடுத்து, இந்திய அரசால் சிறை தண்டனைக்கு ஆளானார். இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில், நல்லகண்ணுவை கைது செய்த போலீசார், சுருட்டை பற்றவைத்து அவரது மீசையை பொசுக்கி தலைமறைவாக உள்ள தோழர்கள் எங்கே? என கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். உயிரே போனாலும் தோழர்களை காட்டிக்கொடுக்க முயலாத நான் இந்த மீசைக்கா அஞ்சப்போகிறேன் என கர்ஜித்தவர், அன்றிலிருந்து மீசையை மழித்தபடியே தன்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டார்.

சாதி ஒழிப்பே பிரதான இலக்காக...
சிறை வாழ்க்கை தான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தனக்கு ஏற்படுத்தியதாக கூறிவந்த நல்லகண்ணுவுக்கு, சாதி ஒழிப்பே பிரதான இலக்காக இருந்தது. அதனால் தான் சாதி ஒழிப்பு போராளி அன்னச்சாமி, 7 ஆண்டுகள் சிறைவாசம் கண்ட நல்லகண்ணுவுக்கு தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தார். திருமணத்திற்கு பிறகு சாதி ஒழிப்புக்காக களமாடிய நல்லகண்ணு, நிலையான வீடு இல்லாததால் பட்டியலின மக்களை ஓடும் குடிகள் என அழைத்ததற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஏராளமான பட்டியலின மக்களை திரட்டி போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையையும் பெற்றுத் தந்தார்.

மாற்று சமூகத்தினர் மீது சீற்றம் கொள்ளாத நல்லகண்ணு

நாங்குநேரியில் கோவில் நுழைவு போராட்டம், செருப்பணிந்து வீதிகளில் நடக்கும் போராட்டம் என பட்டியலின மக்களுக்காக போராட்டக்களத்திலேயே களமாடிக் கொண்டிருந்தார் தோழர் நல்லகண்ணு. 1996ஆம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் பட்டியலின மக்களுக்கு இடையே ஏற்பட்ட சாதி கலவரத்தில் தனது மாமனார் அன்னச்சாமி வெட்டிச் சாய்க்கப்பட்டாலும் மாற்று சமூகத்தினர் மீது சீற்றம் கொள்ளாத நல்லகண்ணு, ஒருசிலர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளி கூண்டில் நிறுத்திவிட முடியாது என தீரத்தோடு கூறியதோடு, அரசு தந்த இழப்பீட்டு தொகையை கூட மாற்று சமூக ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்து மனிதநேயம் பாராட்டியிருந்தார்.

இயற்கை வளத்தையும் பாதுகாத்து வந்தார் தோழர் நல்லகண்ணு
இடதுசாரி அரசியல் அமைப்பான விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக 25ஆண்டுகள் இருந்து விவசாயிகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடர்ந்த நல்லகண்ணு தன்னுடைய 86 வயதிலும் கூட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடி தாமிரபரணி ஆற்றை காப்பாற்றினார். பல கனிமவளக் கொள்ளைக்கு எதிராகவும் வழக்கு தொடுத்து இயற்கை வளத்தையும் பாதுகாத்து வந்தார் தோழர் நல்லகண்ணு.

கொடையாளி தான் தோழர் நல்லகண்ணு

தனது பொது வாழ்வில், மூன்று முறை தேர்தல் அரசியலில் களம் கண்ட தோழர் நல்லகண்ணுவிடம் ஜனநாயகமும் வாக்காளர்களுமே தோல்வி கண்டனர். தன் இறுதி மூச்சுள்ளவரை பணத்தை துச்சமென்றே நினைத்து வாழ்ந்த நல்லகண்ணு, தனது 80ஆவது பிறந்த நாளின் போது, கட்சி தந்த ஒரு கோடி ரூபாயை திருப்பி கட்சிக்கே கொடுத்தும், அரசு தந்த பணத்தை ஏழை மக்களுக்கு அளித்தும் நெகிழ வைத்தார். அண்மையில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருது பரிசுத்தொகையான 10 லட்சம் ரூபாயுடன் தனது பணம் 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்த கொடையாளி தான் தோழர் நல்லகண்ணு.

தோழர் நல்லகண்ணுவுக்கு நியூஸ் தமிழ் குழுவின் செவ்வணக்கம்

கறைபடியாத அரசியலுக்கு சொந்தக்காரரான தோழர் நல்லகண்ணுவின் உயிர், அவரது உடலை விட்டு வேண்டுமானால் பிரிந்திருக்கலாம், ஆனால் தூய அரசியலை முன்னெடுக்க முனையும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். வணக்கத்திற்குரிய வாழ்க்கையை தன்னடக்கத்தோடு வாழ்ந்து சென்ற மாபெரும் மக்கள் தலைவர் தோழர் நல்லகண்ணுவுக்கு நியூஸ் தமிழ் குழுவின் செவ்வணக்கம்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்

0
2 mins agoshare
PDY Murder








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved