Also Watch
Read this
கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர், சட்டமன்ற கொறடாவை தேர்வு செய்ய முடியாது என்று, சிவி.சண்முகம் பதிலடி தந்துள்ளார். பலவீனத்தை மறைக்க எடப்பாடி பழனிசாமி அப்பட்டமான பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

தவெக அரசுக்கு ஆதரவு
இதுதொடர்பாக எம்எல்ஏ சி.வி.சண்முகம் கூறி இருப்பதாவது;
பெரும்பான்மை அதிமுக எம்எல்ஏக்களான நாங்கள், தவெக அரசுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை அதிமுக எம்எல்ஏக்கள் சிலர், அரசுக்கு எதிராகவும், நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்களித்து உள்ளனர். அதிமுகவின் கொறடா என்று, யாரும் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால், இபிஎஸ் உத்தரவு செல்லாது. அதிமுக எம்எல்ஏ.க்கள் 47 பேரிடமும் கையெழுத்து பெற்றேன் எனக் கூறும் இபிஎஸ், எப்போது எங்கே கையெழுத்து போட்டார்கள் என்று கூற முடியுமா? தைரியம் இருந்தால் அதனை வெளியே காட்ட முடியுமா? தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதை மறைப்பதற்காக இவ்வாறு பேசுகிறார். 47 பேர் என்னை ஆதரிக்கிறார்கள் என்று, சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு வழங்கியது போலியான கடிதம்.

திமுகவை அப்புறப்படுத்த வேண்டும்
எங்களுடைய நோக்கமும் தவெகவின் நோக்கமும் திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான். அதனால்தான் நாங்கள் இன்றைக்கு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். வேறு எந்த நோக்கமும் இல்லை. இதனால் தான் கருத்து வேறுபாடு வந்தது. திமுகவின் எதிர்ப்பிலே வளர்ந்து உள்ளோம். எந்த சூழலிலும் அதிமுக தான் எங்கள் இயக்கம். இன்றுவரை அவர் தான் எங்களது பொதுச்செயலாளர். எங்களை துரோகிகள் என சொல்கிறார், பின்னர், திமுக உடன் போகலாம் என்று, இபிஎஸ் கூறியதற்கு என்ன அர்த்தம்?

திமுகவை எதிர்க்கும் இயக்கம் அதிமுக
தேர்தல் முடிவு நாளன்று, 2 திமுக முன்னாள் அமைச்சர்கள் என்னிடம் என்னென்னமோ பேசினார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், மறுநாள் காலையில்தான் இபிஎஸ், ஆட்சியமைக்க போகிறோம், திமுக ஆதரவு கொடுக்கும் என்றார். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. அவர்களுடன் கூட்டணி வைக்க எப்படி தொண்டர்கள் ஒத்துக் கொள்வார்கள்? என் மனைவி கூட சோற்றில் விஷம் வைத்துவிடுவார் என நான் கூறினேன். அதிமுக தோல்வியை சந்தித்து உள்ளது. அதை ஏற்க மனமில்லாமல், 47 இடங்களில் வெற்றி பெற்றதை மிகப் பெரிய வெற்றி என்று கூறுகிறார். இவரை பொதுச் செயலாளராக வைத்து என்ன செய்ய முடியும்?

ஜெயலலிதா போல் தைரியம் உள்ளதா?
ஜெயலலிதாவைப் போல தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என கூறும் தைரியம் உள்ளதா? வெற்றி, தோல்வியை சரிசமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், அவருக்கு அந்த மனப் பக்குவம் இல்லை. இதுவரை எந்த தோல்விக்கும் பொறுப்பேற்கவில்லை. இந்த தோல்வியில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது, அவரை மட்டும் நான் குற்றம்சாட்டவில்லை.
தமிழகத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது. திருமாவளவனை முதல்வர் ஆக்கலாம் என்று, திமுகவால் முன்மொழியப்பட்டது. அவர் மட்டும் முதல்வர். மற்ற 33 அமைச்சர் பதவிகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என சொன்னார்கள். ஆனால், விசிக ஆட்சி என்றுதான் வரும் எனக் கூறி இபிஎஸ் அதை ஏற்க மறுத்தார். நான்தான் முதல்வர் இல்லையென்றால், நாம் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று சொல்லிவிட்டார்.

இபிஎஸ் மிரட்டுகிறார்
புதுச்சேரி ரிசார்ட்டில் என்ன செய்தார் என்பதை இபிஎஸ் சொல்வாரா? புதுச்சேரி கூட்டத்தில் தான் முதல்வராகப் போவதாக தெரிவித்தார். திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறினார். ஆட்சியமைக்க டெல்லியில் பேசி, அனுமதி பெற்றுவிட்டதாகவும் இபிஎஸ் கூறினார். நீங்கள் அனைவரும் அமைச்சராகலாம் என ஆசை வார்த்தை பேசினார். எம்எல்ஏக்களை இபிஎஸ் மிரட்டவும், அச்சுறுத்தவும் பார்க்கிறார்.
இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved