news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

கொளத்தூரை பார்த்து கூட புரியவில்லையா?

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட திமுக, 35 சதவிகித மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற தவெகவை பார்த்து ஏளனமாக பேசுவதா? என முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி
இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் கொண்டு வந்தோம். வாக்கெடுப்பின்படி, அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தவெக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக சபாநாயகரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது.

ஒளிக்கவில்லை, மறைக்கவில்லை
சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது, எதிர்ப்பை யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்பு செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் எதையும் ஒளிக்கவில்லை, மறைக்கவில்லை.

சில விளக்கங்கள்...
பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். 2006ல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை.

அரை கோடிக்கும் அதிகமான வாக்குகள்
த.வெ.க.வுக்கு கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது திமுக வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ் மிகவும் குறைவு. தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம்.

35% வெற்றி, ஏளனப் பேச்சு
தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்து உள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?

மக்கள் மீது கடன்சுமை
மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தை காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது, எந்தக் கணக்கில் என்று புரியவில்லை.

அம்பலமான டீசண்ட் வெர்ஸன்
மக்கள் ஆதரவுடன், தனிப்பெரும் கட்சியான த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று, நாடெங்கும் உலவுவதையும் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம்.

கொளத்தூரை பார்த்தும்...
நம்பிக்கை இல்லாததால்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதை கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும் கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும் கூடவா புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.

நாகரிகமான பதிவு
அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில், திமுக தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்து தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம். இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999ல் பா.ஜ.க. கூட்டணியை திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க. உடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, அமைச்சர் பதவி பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

புகை கக்கும் திமுக
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999ல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத் தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

திமுக அலறப்போவது உறுதி
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக் கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும் தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
இவ்வாறு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்து உள்ளார்.

Related Link
தூய சக்தியா? எம்.எல்.ஏ.க்களை தூக்கும் சக்தியா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

தூய சக்தியா? எம்.எல்.ஏ.க்களை தூக்கும் சக்தியா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
4 hrs 16 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau