Also Watch
Read this
By: Manigandan Raja

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஈரான் தாக்குதல் :
ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தளங்கள் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
ஈரானின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க வாஷிங்டன் தயாராகி வருவதாக டிரம்ப் தெரிவித்த சில நிமிடங்களிலேயே ஈரானுக்குள் அமெரிக்கப் படைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் காட்சிகளை வெளியிட்ட அமெரிக்கா :

ஈரான் மீதான தாக்குதல் காட்சிகளை அமெரிக்கா வெளியிட்டது.கடந்த 25- ம் தேதியன்று ஹோர்முஸ் நீரிணையில் சிங்கப்பூர் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக கெஷ்ம் தீவு அருகே இருந்த ஈரானின் ஏவுகணை, ட்ரோன் சேமிப்பு நிலையங்கள் மற்றும் ரேடார் தளங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதல்கள் தொடர்பான 37 விநாடிகள் கொண்ட காணொளியை அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இத்தாக்குதலுக்குப் பிறகு, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை அறிவித்தது.
இந்நிலையில், "வன்முறைக்கு வன்முறையே பதிலடி" என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தமது எக்ஸ் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் மிரட்டல் :

(Courtesy:Reuters)
அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சில ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து டிஜிட்டல் சேவை வரியை அமல்படுத்த தீவிரமாக ஆலோசித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், 100% இறக்குமதி வரி விதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த புதிய வரியானது அந்தந்த நாடுகளுடன் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் மீறி விதிக்கப்படும் என்றும், அமெரிக்க நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் :
இந்தியாவின் ஹைதராபாத்தில் ஒரு சாலைக்கு தன் பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இவ்வாறு கௌரவிக்கப்படும் முதல் ஜனாதிபதி தாமே என தெரிவித்துள்ள டிரம்ப், தெலங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்க்கா மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் ஆகியோர் நினைவுப் பலகையை திறந்து வைத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
புதிதாக பெயரிடப்பட்ட இந்த டொனால்ட் டிரம்ப் அவென்யூ, மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் அமேசான் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது.