Also Watch
Read this
By: Web Team

ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் ராணுவப் படையான SAF, துணை ராணுவப் படையான RSF இடையே நடக்கும் கடும் சண்டையில், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம் பெயரச் செய்துள்ள இந்த உள்நாட்டுப் போர், சுமார் 6.3 மில்லியன் மக்களை கடுமையான பஞ்சத்தில் தள்ளியுள்ளது. சொல்லப் போனால், சூடான் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் அடிப்படைத் தேவைக்கே திண்டாடும் நிலையில் உள்ளனர்.
சூடானில் உள்நாட்டுப் போர், தொடங்கிய உடனேயே இந்திய அரசின் ’ஆப்ரேஷன் காவேரி’ நடவடிக்கையால், 500 இந்தியர்கள் பாதுகாப்பாக அந்நாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அல்-ஃபாஷர் நகரில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவரை RSF போராளிகள் கடத்தி, நியாலா என்னும் நகரத்துக்கு தூக்கிச் சென்றுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை உறுதிப்படுத்தியுள்ள இந்தியாவுக்கான சூடான் தூதர் முகமது அப்தல்லா அலி எல்டோம் (abdalla ali eltom), சிறை பிடிக்கப்பட்ட இந்தியரைப் பாதுகாப்பாக மீட்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
சூடான் RSF போராளிகளால் கடத்தப்பட்ட இந்தியர், ஒடிஷாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான ஆதர்ஷ் (Adarsh) என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் RSF போராளிகள் பேசும் வீடியோ, சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. ஆதர்ஷ்-க்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2022ஆம் ஆண்டு முதல் சூடானில் உள்ள சுக்ரதி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், போராளிகள் பிடியில் சிக்கியுள்ள தனது கணவரின் பாதுகாப்பான விடுதலைக்கு உதவுமாறு ஒடிஷா அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஆதர்ஷ் மனைவி சுஸ்மிதா கோரிக்கை வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து இரண்டாவதாக வெளியாகியுள்ள வீடியோவில், எல்-ஃபாஷரில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளாக மிகுந்த சிரமத்துடன் சூடானில் வசித்து வருவதாகவும், குடும்பத்தினரும் குழந்தைகளும் மிகவும் கவலையில் உள்ளதாகவும் பேசியுள்ள ஆதர்ஷ், விரைவில் தன்னைக் காப்பாற்றுமாறு மாநில அரசுக்கு உருக்கத்துடன் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.