Also Watch
Read this
எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும், அத்தனையில் இருந்தும் அசால்ட் ஆக வெளியில் வரும் பிரபல யூடியூபர் இர்ஃபான், கடந்த ஆட்சியில் மன்னிப்பு கேட்டு ஒரு வழக்கில் இருந்து தப்பினார். ஆனால், அந்த வழக்கை மீண்டும் தூசிதட்டி விசாரிக்க மருத்துவத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்களாம். குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து, அதனை பார்ட்டி வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் மீண்டும் இர்ஃபானை சிக்கலில் இழுத்து விட்டுள்ள நிலையில், வழக்கம்போல தன் அரசியல் பலத்தால் சட்டத்தின் ஓட்டை வழியாக வெளியில் வருவாரா? அல்லது இந்த ஆட்சியில் எதுவும் எடுபடவில்லையே என்ற மனநிலைக்கு செல்வாரா? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

உணவு தரமற்று இருப்பதாக கூறி ’சீல்’
லாரி லாரியாய் SORRY கேட்டு ஒவ்வொரு சர்ச்சைகளில் இருந்தும் நேக்காக தப்பி வந்த இர்ஃபான், இனி எத்தனை SORRY கேட்டாலும் தப்பிக்க முடியாமல் பழைய பாக்கிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ரோட்டுக்கடை முதல் ஹை ரேட்டுக்கடை வரை உணவு சாப்பிட்டு ரிவ்யூ கொடுத்து ஃபேமஸ் ஆனவர்தான் இர்பான். அதோடு, சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோருடன் அமர்ந்து வெரைட்டி வெரைட்டியாக உணவு சாப்பிட்டு தானும் செலிபிரிட்டி ரேஞ்சுக்கு மாறினார். நின்றால் vlog, நடந்தால் vlog என வீடியோக்களில் படுபிசியாக இருந்த இர்ஃபானுக்கு சர்ச்சையும் சகட்டுமெனிக்கு படையெடுத்தது. ’ஆஹா ஓஹோ’ என இர்பான் ரிவியூ செய்த ஓட்டல்களில் அதிரடியாக ஆய்வில் இறங்கிய உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவு தரமற்று இருப்பதாக கூறி சீல் வைக்க ஆரம்பித்தனர்.

இர்பானுக்கு சொந்தமான கார் மோதி...
அதேபோல், கடந்த 2023ஆம் ஆண்டு இர்பானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதி சென்னை மறைமலைநகரில் மூதாட்டி பத்மாவதி என்பவர் உயிரிழந்தார். அதுதொடர்பாக, அவரது நண்பர் அசாருதீன் மீது வழக்குப்பாய்ந்தாலும், இர்பானை இந்த விபத்தில் இருந்து தப்பிக்க வைக்க ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது.

GENDER REVEALING PARTY
இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே இர்பானுக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமானார். சந்தோஷத்தில் துபாய்க்கு பறந்த அவர் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை கருவிலேயே கண்டறிந்து, GENDER REVEALING PARTY நடத்தி அதை ஊருக்கே வீடியோ போட்டு காட்டினார். அது என்ன சமாச்சாரம்? என சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி கேள்வி கேட்க, பார்ட்டி வீடியோவையே டெலிட் செய்து மன்னிப்பு கேட்டார் இர்ஃபான். மன்னிப்பு கேட்டு விட்டால் போதுமா? அப்டியானால் வசதி படைத்தவர்கள் வெளிநாடு சென்று குழந்தையின் பாலினத்தை கண்டறியலாமா? இர்பானுக்கு மட்டும் என்ன தனி சட்டமா? என பலரும் கேள்விக்குமேல் கேள்வி எழுப்பினர். ஆனாலும், குழந்தை பாலினம் கண்டறிப்பட்டது துபாயில் என்பதால் நடவடிக்கையில் அப்படி ஒன்றும் வேகம் இல்லை.

தவறான முன்னுதாரணம்
இதனிடையே, இர்பானின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது மனைவியை பிரசவ அறையில் சேர்த்தது முதல் தொப்புள்கொடியை வெட்டுவதுவரை 16 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டு அடுத்த வம்பை விலைக்கு வாங்கினார். அது எப்படி மருத்துவமே படிக்காத ஒருவர் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டலாம்? அதனை எப்படி மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்தது? எதை வேண்டுமானாலும் செய்துகொண்டு தன் அரசியல்பலத்தால் இர்பான் தப்பிக்கிறாரா? இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகாதா? இப்படி ஒவ்வொரு தந்தையும் கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டு பிரசவ அறைக்குள் நுழைந்தால் நாடு தாங்குமா? என பலரும் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

ஏழைகள் என்றால் இளக்காரமா?
இதனையடுத்து, சிலநாட்கள் சர்ச்சைக்கு ரெஸ்ட் விட்ட இர்பான், ஈகை திருநாளாம் ரமலான் பண்டிகைக்கு இல்லாத மக்களுக்கு வாரி வழங்குகிறேன் எனக்கூறி காருக்குள் இருந்தபடியே புது ஆடைகளை வழங்கியதோடு முகம் சுளிக்கும் வகையில் அவர்களை ஒருமையில் பேசி புதிய சர்ச்சைக்கு வழிவகுத்தார். ஏழைகள் என்றால் இளக்காரமா? ஏன் வெளியில் இறங்கி வந்து கொடுத்தால் என்ன?

ஒருமையில் பேசி வாரி வழங்குவதற்கு பெயர் என்ன? என பலரும் ஆவேசமாக கேள்வி எழுப்பியதோடு அவரது வீடியோக்களுக்கு வியூசும் டவுன் ஆனது. அதனால், ஒரு மாதத்திற்கு பிறகு மன்னிப்புகேட்டு வீடியோ வெளியிட்டார் இர்பான். ஏன் 1 மாதம் அவர் கோமாவில் இருந்தாரா? என விமர்சனம் மேலும் வலுக்கவே செய்தது. இப்படி, ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருக்கும் இர்பானுக்கு ஏற்கெனவே இழுத்து வைத்த ஒரு சிக்கல் ஒன்று சுற்றி வளைக்க காத்திருக்கிறது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு...
குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து வெளியிட்ட விவகாரத்தில் கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறைக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை தட்டிவிட்டு உஷாராக தப்பித்தார் இர்பான். ஆனால், விசாரணையை சுகாதாரத்துறை முடித்து வைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனால், இர்பானுக்கு சம்மன் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், அவரை நேரில் அழைத்து விசாரிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் இர்பான் மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட கதை எல்லாம் இந்த ஆட்சியில் எடுபடாது என்றே பேசப்படுகிறது.