Also Watch
Read this

காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்ட 32க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தை, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) நியாயப்படுத்தி பேசியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்கள் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த சில வாரங்களாக சட்டசபைத் தேர்தல், விலைவாசி உயர்வு மற்றும் தங்களுக்குரிய அடிப்படை அரசியல் உரிமைகளைக் கேட்டு 'கூட்டு அவாமி அதிரடி குழு' JAAC அமைப்பு தலைமையில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் ராவலாகோட் Rawalakot பகுதியில் இருந்து முசாபராபாத் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர்.

32க்கும் மேற்பட்டோர் பலி
இரண்டு நாட்களில், ராவலாகோட் பகுதியில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நடந்து வரும் இந்த வன்முறையில் இதுவரை 90க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு உலக அளவில் கடும் கண்டன குரல் எழுந்துள்ளது.
பாக். அமைச்சரின் சர்ச்சை பேச்சு
இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப், இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி உள்ளார். ’போராட்டக்காரர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது,’ எனக் கூறிய ஆசிப், போராடிய மக்களை 'இந்தியாவைப் போன்ற எதிரிகள்' என கூறி உள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் இந்த பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் சர்ச்சை பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா கடும் கண்டனம்
பாகிஸ்தானின் இந்த கொடூரமான மனித உரிமை மீறலுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அங்கு நடத்தப்படும் தேர்தல், பாகிஸ்தானின் சட்ட விரோத ஆக்கிரமிப்பை மறைப்பதற்காக நடத்தப்படும் நாடகம் என்றும், அப்பாவி பொது மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மிக மோசமான ஒடுக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved