Also Watch
Read this
கொரோனா காலத்தைப் போல், போர் விளைவுகளுக்கு தயாராக இருக்க கூறும் பிரதமர் மோடி, மக்களை காக்க தயாராக இருக்கிறாரா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

போர்ச்சூழல் தீவிரமடைந்த உடன், அதன் தாக்கங்களை உணர்ந்து, உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒன்றும் செய்யாதது ஏன்? என்றும் கேட்டுள்ளார். கடிதம், போராட்டம், தட்டுப்பாடு, திண்டாட்டம் இவ்வளவுக்குப் பிறகும் மக்களை தயாராக இருக்கச் சொல்கிறார் மோடி என்று, மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தொலைநோக்கோ, முன்னெச்சரிக்கையோ எதுவும் இன்றிச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
தயாராக இருக்க வேண்டியது...
இதுதொடர்பாக, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? கொரோனாவுக்கு தயாரானது போல் மேற்கு ஆசியப் போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் பிரதமர்.

கடிதம் எழுதினேன்
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்து பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவு கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு நடவடிக்கை
தங்களது நடவடிக்கைகளுக்கு காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPGக்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம், MSME நிறுவனங்கள் மின் அடுப்பு, மின் சூடேற்றி கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன், தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை. உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்து கொள்ள அனுமதி என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை, எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம்.

நீங்கள் தயாரா?
அப்போதே கேட்டேன், மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? அப்போதும் பதில் இல்லை. தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள். மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்று தான், “எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved