Also Watch
Read this

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. விடுபட்ட நபர்கள் படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது இணையவழி சேவை மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

ஏப்ரல் 23ல் வாக்குப்பதிவு
தமிழகத்தில், சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாகச் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுள்ள தகுதியுள்ள பொது மக்கள், அதனைச் சரிபார்த்துப் பெயரை இணைப்பதற்கான இறுதிக் கட்ட காலக்கெடுவை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர், அதற்காக விண்ணப்பிக்க மார்ச் 26ஆம் தேதியான இன்று வியாழக்கிழமை, கடைசி நாள்.

இதுவரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் பெயர்களைப் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர்.

ஜனநாயகக் கடமையை உறுதி செய்யுமாறு...
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 'படிவம்-6' (Form 6) மூலம் அந்தந்த பகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள சேவை மூலமாகவோ ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதால், இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள நபர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் ஜனநாயகக் கடமையை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved