Also Watch
Read this

சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என வசனம் பேசி ஆட்சிக்கு வந்தும், ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தவெகவினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் முதல்வர் ஒருவார்த்தையாவது பேசுவாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
அச்சுறுத்தல், மிரட்டல்
இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
மதுரை மாவட்டம், கீழமாத்தூரில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கின்றன. தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி, ஆளும் தவெகவினர் மிரட்டியதாகவும் தகவல்கள் வருகின்றன.

விலை மதிப்பற்ற உயிர்கள்
சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால், ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகம், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு தொடர்கிறது.

இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று
முந்தைய ஆட்சிபோல், தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்து உள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது.
ஆஹா, என்ன ஒரு மாற்றம்?
“முதலமைச்சர் கோட்டைக்கு வருகிறார், கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார், ஆஹா என்ன ஒரு மாற்றம்?” என்று ஒரு தனி உலகத்தை கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா?

முதல்வருக்கு வலியுறுத்தல்
உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு உள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved