Also Watch
Read this
By: Web Team

கடந்த 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்ற தேர்தலில், இந்த மண்ணில் மீண்டும் காணப் போகிறோம், என்று, தவெக தலைவர் விஜய் உறுதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் அரசியல் இயக்கமான தவெக மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்பட போகிறது.
1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம்.
மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள், இந்த திருப்புமுனை தருணத்தை நிரூபிக்க போவது நிச்சயம். 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.
தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் குறித்து, உங்கள் அனைவருக்கும் தெரியும். உங்கள் மீதான உள்ளன்புமிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியோர், உடல்நலம் குன்றியோர், பள்ளி சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், தவெக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்த்து, மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுக்கு வருவோர், ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தகுதியும் பொறுப்பும் மிக்க ஒரு அரசியல் பேரியக்கம் தவெக என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.
மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில் நம்மால் நிகழப்போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்தி காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்.
உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளையும் விரித்து காத்திருப்பேன்.
மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்.
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved