Also Watch
Read this
பாகிஸ்தானின் மோஸ்ட் வாண்டட் தாதாவாக வலம் வந்து, அந்த நாட்டின் உளவு அமைப்பான ISI கைக்கூலியாக மாறி சர்வதேச பயங்கரவாதியாக விஸ்வரூபம் எடுத்துள்ள ஷாசாத் பட்டி, என்பவனின் நிழல் தற்போது, தமிழகத்தில் நுழைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து ட்ரோன் மூலம் அதிநவீன ஆயுதங்களையும், பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்களையும் கடத்தி நாசவேலைகளில் ஈடுபட்டுவரும் ஷாசாத் பட்டி நெட்வொர்க், தமிழகத்திற்குள்ளும் தனது கிரிமினல் கரங்களை நீட்டியிருப்பது தேசிய பாதுகாப்பு துறையையே அதிர வைத்திருக்கிறது.

ஷாக் ரிப்போர்ட்
தமிழகத்தில், சமீபத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பாகிஸ்தான் பயங்கரவாத நெட்வொர்க்குடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமாகியிருக்கும் ஷாக் ரிப்போர்ட்.

உ.பி.யைச் சேர்ந்த நபர்
கோவையில் பதுங்கி வேலை செய்வது போல் நடித்து, ஆன்-லைன் மூலமாக தமிழக இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மூளைச்சலவை செய்து ஈர்த்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான மக்சூத் அலி என்பவரை, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் உதவியுடன் உத்தரப்பிரதேச போலீசார் தூக்கி சென்றனர்.

தஞ்சாவூரிலும்...
இதேபோல், தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட கிலாஃபத், ஹிஸ்ப் உத் தஹ்ரிர் அமைப்புகளுக்கு ஆதரவாக ரகசிய வகுப்புகளை நடத்தி, இளைஞர்களை மூளைச்சலவை செய்ததாக யாசர் அப்துல், உமர் முக்தர், ஜாகீர் உசேன் உள்ளிட்ட 6 பேரை சிறப்பு பிரிவு மற்றும் தஞ்சை கிழக்கு போலீசார் கடந்த 1ஆம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இவர்களது வீடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள், 5 செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன.

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
இதனை தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் அனைத்து மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடனும், காணொலி வாயிலாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, பயங்கரவாத நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், தமிழகத்தில் இந்த நெட்வொர்க்கை வேரோடு பிடுங்கி எறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர்.

அதிகாலை நேரத்தில்...
தஞ்சையில் கைதான 6 பேரின் வீடுகளில் கடந்த 29ஆம் தேதி, 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் எஸ்.ஐ.யூ. பிரிவினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனைகளை நடத்தினர். பின்னர், அதிகாலை நேரத்தில் திடீரென வீடுகளுக்குள் நுழைந்த போலீசார், தூங்கி கொண்டிருந்தவர்களை எந்த தகவலும் சொல்லாமல் வண்டியில் ஏற்றி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் உடனடியாக தெரிவிக்கப்படாததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த...
மறுபுறம், ஆந்திர பிரதேசத்தின் அதிரடிப்படையான கவுன்டர் இன்டெலிஜென்ஸ் பிரிவு போலீசார், கோவை ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படை பயிற்சி மையமான ஐஎஸ்இ அக்ரானி வளாகத்தில் அதிரடி வேட்டையாடியுள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரதீப் முகர்ஜி என்பவர், விசாகப்பட்டினத்தை தளமாக கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாக பணியாற்றி வருகிறார். இவர் கோவை ஐஎன் எஸ்அக்ரானியில் மேலாண்மை மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வாரமாக அங்கு தங்கியிருந்தார்.

பாக். பெண் அதிகாரி உடன்...
சமூக வலைதளங்கள் மூலமாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் தொடர்பில் இருந்த பிரதீப் முகர்ஜி, விசாகப்பட்டினம் கடற்படை தளத்தின் சீக்ரெட் பாதுகாப்பு தகவல்களை அந்த பெண்ணுக்கு கசிய விட்டுள்ளது ஆந்திர சி.ஐ. போலீசாரின் கணினி வழி விசாரணையில் பக்கா ஆதாரத்துடன் சிக்கியது.

உண்மைகள் என்ன?
உடனடியாக கடற்படை உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, கோவை வந்தடைந்த ஆந்திர சி.ஐ. தனிப்படை போலீசார், பயிற்சி மையத்திற்குள்ளேயே வைத்து பிரதீப் முகர்ஜியை தூக்கி சென்றனர். கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, தீவிர விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

எல்லை தாண்டிய உளவு தகவல்கள் கசிவு தொடங்கி, உள்ளூர் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் பயங்கரவாத வலைப்பின்னல் வரை தமிழகத்தை நோக்கி நீளும் இந்த ஆபத்தான கரங்களை புலனாய்வு துறை எப்படி முறியடிக்க போகிறது? அடுத்தடுத்து வெளிவர போகும் திடுக்கிடும் உண்மைகள் என்ன? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved