Also Watch
Read this
ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பயிற்சி தரப்படும் என்றும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

தொடர்ந்து 13ஆவது முறையாக...
டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 13ஆவது முறையாக மூவண்ணக் கொடியேற்றிய பிரதமர் மோடி, பட்டொளி வீசிப் பறந்த புகழ் கொடியேற்றி வரலாற்றுப் பெருமையை தனதாக்கிக் கொண்டார். தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது;
இன்று ஒவ்வொரு இதயமும் வந்தே மாதரத்தின் தாளத்துடன் துடிக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி, ஒவ்வொரு மனதிலும் வந்தேமாதரம் உயர்ந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு செங்கோட்டை மதில்களில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் முழுமையாக இசைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க தருணம். மகாத்மா காந்தி மற்றும் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது அஞ்சலி.

இந்தியா வளர்ந்த நாடாக...
வளர்ந்த பாரதம் 2047 மற்றும் பெரிய கனவுகள் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும். இனி, சிறிய கனவுகள் போதுமானதாக இருக்காது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். 140 கோடி இந்தியர்களின் கூட்டு உழைப்பால் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு வளர்ந்த நாடாக மாற உறுதி பூணும்போது, அது நமது துணிச்சலின் அடையாளமாக மாறும். உலகமே நம்மை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கும்.

பிரதமர் கவலை
சமீப நாட்களாக, நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் துயரத்தில் நாங்கள் முழுமையாகப் பங்கெடுக்கிறோம். பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த தேசமும் அவர்களுடன் உறுதுணையாக நிற்கும் என்ற நம்பிக்கையை நான் அளிக்கிறேன்.

அனைத்து மக்களின்...
கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி 4 மடங்கும், காதி கிராம தொழில் உற்பத்தி 5 மடங்கும், மின்னணு உற்பத்தி 7 மடங்கும் அதிகரித்து உள்ளது. மொபைல் போன் உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 100 சதவீதமும் வளர்ச்சியடைந்து உள்ளன. நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அனைத்து பிரிவு மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது.

இதுவே இலக்கு...
சுதந்திரத்திற்கு பிறகு வேகம் எடுக்காமல் இருந்த இந்தியா, 2014ல் உலகளவில் பலவீனமான பொருளாதாரப் பட்டியலில் இருந்தது. ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா புதிய வேகத்தைப் பெற்று மிக வேகமாக முன்னேறி வருகிறது. எனர்ஜி பாதுகாப்பு தற்போதைய தேவையாக உள்ளது. 2047க்குள் 100 கிகாவாட் அணுசக்தியை அடைவதையும், இந்த தசாப்தத்தில் 5 புதிய அணு உலைகளைத் தொடங்குவதையும் இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்.

சுயசார்பை நோக்கி...
12 ஆண்டுகளுக்கு முன்பு 70 நகரங்களில் மட்டுமே குழாய் வழி எரிவாயு இணைப்பு இருந்தது. ஆனால், இன்று 700 நகரங்களில் 1.75 கோடி வீடுகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

’தடுப்பூசிகள், பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் கிடைக்காது,’ என வதந்திகளைப் பரப்பி நாட்டை பீதியில் வைத்திருக்க சிலர் முயன்றதாகவும், ஆனால் தடைகளைத் தாண்டி நாடு சுயசார்பை நோக்கி உறுதியாக முன்னேறி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved