Also Watch
Read this
மக்கள் நலனும், மனித நேயமும் இந்தியாவுக்கு முக்கியமானவை என்று டெல்லி பிரிக்ஸ் மாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்றும் தெரிவித்து உள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில், உலகளாவிய சீர்திருத்தத்திற்கு 10 அம்சங்களை முன்னிறுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலை கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

உலகின் தெற்கு பிராந்திய நாடுகள், இனி விதிகளை வகுக்கும் வல்லமை கொண்டவையாக மாற வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியதோடு,

அடுத்த 20 ஆண்டுகளுக்கு புதிய லட்சியம் மிக்க செயல்திட்டத்தில் பிரிக்ஸ் நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு
பிரதமர் மோடி தலைமையில், 2 நாட்கள் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் மாநாட்டில் சீனா, ரஷ்யா, பிரேசில், ஈரான், தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, UAE, சவுதி அரேபியா,

இந்தோனேசியா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மையை கட்டமைத்தல் என்ற கருப்பொருளில் BRICS உச்சி மாநாடு நடைபெறுகிறது.

உலகப் பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

பிரதமர் மோடி உரை
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது;
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும், இனிமேலும் தாமதிக்க முடியாது. உலகில் வர்த்தகத் தடைகள் அதிகரிக்கும் சூழலில், இந்தியா பிற நாடுகளுடன் பொருளாதார ரீதியான பாலங்களை அமைத்து வருகிறது. உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொதுமக்களை மையமாக கொண்டே பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்படுகிறது.

உலகளவில் நிர்வாக பங்கு தேவை
ஐ.நா., உலக வங்கி போன்ற நிறுவனங்களில் முக்கிய நியமனங்களில் இந்தியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் அதிகாரம் தேவை. உலகளாவிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கு உலகளாவிய நிர்வாகத்தில் பங்கு இருக்க வேண்டும். ஒருங்கிணைந்து உலக நிா்வாகத்தை சீா்திருத்தம் செய்வோம்.

BRICS-ஐ வலுப்படுத்த வேண்டும்
பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு புதிய அடையாளத்தை பெற்றுள்ளது. இந்த கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும். பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைவரும் முன்னேற்ற பாதையை நோக்கி நடைபோடுவோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும். பிரிக்ஸ் கூட்டமைப்பினர் இணைந்து உலக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

மனிதநேயமே முன்னுரிமை
மக்கள் மற்றும் மனிதநேயம், நிலைத்தன்மை என்பது தான் எங்களுக்கு முன்னுரிமை. பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved