Also Watch
Read this
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக வேட்பாளர்களை ஆதரித்து, ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார். துணை நிலை ஆளுநரை வைத்துக் கொண்டு புதுச்சேரியை பாஜக ஆட்டிப் படைப்பதாக விமர்சித்தார்.

புதுச்சேரியில் ராகுல்காந்தி
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி பேசியதாவது: புதுச்சேரியை ஆட்சி செய்பவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல, எங்கோ இருந்து புதுவையை ஆட்சி செய்கின்றனர். இங்கு நடக்கும் ஆட்சி மக்களின் விருப்பத்தை செயல்படுத்தும் அரசு அல்ல, டெல்லியில் தங்கள் கருத்துக்களை திணிப்பவர்களின் கீழ் செயல்படும் அரசாக உள்ளது. பாஜக கொள்கை, சித்தாத்தங்களை புதுவையில் புகுத்த நினைக்கின்றனர். புதுவை மக்களின் எண்ணங்களை ஏற்று நடத்தும் ஆட்சி இல்லை.

தெரிந்தும் நடவடிக்கை இல்லை
மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரெஸ்டோபார்கள், மதுபான கடைகள் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இதை அகற்ற கோரிக்கை வைத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. மக்களிடம் மட்டுமல்ல, ஆண்டவனிடமும் கொள்ளை அடித்துள்ளனர். கோவில் நிலங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இரவில், பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை. பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து ஆளுநருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எதை தொட்டாலும் கமிஷன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முந்திக்கொண்டு துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. உயிரோட்டமாக இருந்த தொழில்கள் நசிந்துவிட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பாஜக அரசு அதானி அரசாக செயல்படுகிறது. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே அவருக்கு விற்கப்பட்டு விட்டது. புதுவையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மின்துறையும் அதானிக்கு விற்கப்பட்டு விடும் என எச்சரிக்கிறேன். புதுவையில் போலி மருந்து தொழிற்சாலைகள் நடத்தப்பட்டு, போலி மருந்து உற்பத்தி கேந்திரமாக மாறி உள்ளது. இதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடு முழுவதும் போலி மருந்துகள் விற்கப்பட்டு உள்ளது. இது முறைகேடு மட்டுமல்ல, படுகொலைக்கும் காரணமாகி உள்ளது. 30 சதவீத கமிஷன் அனைத்து துறை பணிகளுக்கும் பெறப்படுகிறது. எதை தொட்டாலும் கமிஷன், குடிநீர், வடிகால், பள்ளி கட்டடம் என அனைத்து பணிகளுக்கும் கமிஷன் பெறுகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...
* வேலையில்லாத இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.2,000
* 30,000 அரசு, தனியார் பணியிடங்களில் வேலை
* பெண்களுக்கு இலவச பஸ் பயணம்

* அரசு வேலைவாய்ப்பு வயது உச்சவரம்பு 40 ஆக உயர்த்தப்படும்
* ரூ.20 லட்சத்துக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு

ஒலிக்கும் அரசு
புதுவை மக்களின் உணர்வுகளை, எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக, காங்கிரஸ் அரசு இருக்கும். ஆளுநர் அரசர்போல புதுவையை ஆட்சி செய்வதை நாங்கள் விரும்பவில்லை. புதுவை மக்கள் தான் இந்த அரசை ஆள வேண்டும். எனவே தான் மாநில அந்தஸ்து வேண்டும் என கூறுகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 6 மாதத்தில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அடுத்த தலைமுறை தலைவர்கள் உள்ளாட்சி தேர்தல் மூலம் அரசு நிர்வாகத்துக்கு வருவார்கள். புதுவை மக்களின் உண்மையான குரலை ஒலிக்கும் அரசை சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வு செய்யுங்கள்.

புதுவைக்கு வரும்போது...
ஒவ்வொரு முறை புதுவைக்கு வரும்போதும் உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர். உங்களோடும், எனது குடும்பத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உண்டு. இது அரசியல் உறவு அல்ல, அதையும் தாண்டி மனமார்ந்த, உள்ளார்த்தமான ஆழமான உணர்வு உள்ளது. அந்த உறவின் அடிப்படை உண்மையான அன்பு, பரஸ்பர மரியாதை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுவை மக்களின் குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும், மக்களின் எண்ணங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். என் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி.
இவ்வாறு ராகுல்காந்தி பேசி, வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved