Also Watch
Read this
கோவையில் பாஜகவின் தேசியக்கொடி பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசியக்கொடி ஏந்தி செல்வது பாவச்செயலா? கோவை என்ன பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவையில் தேசியக்கொடி பேரணி
கோவையில், தேசியக் கொடியை ஏந்தி பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி கூறியதாவது;
கோவை பிரதான சாலையில் அனுமதி கேட்டதால் மறுக்கப்பட்டது. அனுமதி கேட்ட பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிறுத்தம் இருப்பதாலும், கூட்டம் நிறைந்த பகுதி என்பதாலும் அனுமதிக்கவில்லை. ஊர்வலம் நடத்த அனுமதி கேட்ட பகுதி, அனுமதி வழங்க முடியாத வழித்தடமாகும் என்பதால் மறுக்கப்பட்டது.

அனுமதி வழங்கினால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் மறுக்கப்பட்டது. யாருக்கும் காரணம் இல்லாமல் அனுமதி வழங்க முடியாது என மறுக்கவில்லை. கட்சி சார்பாக ஊர்வலம் செல்லவே அனுமதி மறுக்கப்பட்டது. மாற்று இடத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும். கோவையில் 12 பகுதிகளில் ஊர்வலம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கும் இடங்களில் ஊர்வலம் செல்லலாம். தேசியக் கொடியை ஏந்துவதை அரசு தடுக்கவில்லை.
இவ்வாறு அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

அனுமதி மறுப்பது ஏன்?
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது;
சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை பிடித்து உயிர் நீத்தார். அப்படிப்பட்ட நாட்டில் தேசியக் கொடி பிடித்துச் செல்ல தடை விதிப்பது ஏன்? தேசியக்கொடியை பிடித்து பேரணி செல்ல காவல் துறை அனுமதி மறுப்பது ஏன்? அமைதியாக கொடி பிடித்து செல்லவே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை உள்ளது? அவர்களும் இந்தியாவில் தான் உள்ளார்கள். தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச் செயலா? பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததா?

ஏற்க முடியாது...
தி.க. ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. பாஜக ஊர்வலம் செல்லக் கூடாது. தவெகவுக்கு மட்டும் அனுமதியா? பாஜக சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்துகொள்ள மாட்டர்களா? அனுமதி வழங்கினால் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என காவல் துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறியதை ஏற்க முடியாது. நாட்டின் எந்தப் பகுதியிலும் தேசியக் கொடியை ஏந்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல் சரியில்லை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்பட கூடாது. தேசியக் கொடியை ஏந்த யாருக்கும் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.
தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட இடங்களில் பேரணி நடத்துவது தொடர்பாக காவல் துறையுடன் கலந்தாலோசித்து முடிவை தெரிவிக்குமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved