பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், என்டிஏ கூட்டணி அதிரி புதிரி வெற்றியையும், இந்தியா கூட்டணி அதல பாதாள தோல்வியையும் சந்தித்திருக்கிறது. இதற்கிடையே, பலரை முதல்வராக்கி அழகுபார்த்த 'தி கிங் மேக்கர்' பிரஷாந்த் கிஷோர் எங்கு சென்றார்? எனும் கேள்வி எழுகிறது. சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த கையோடு, அது நடக்காவிட்டால் நான் அரசியலை விட்டே விலகி விடுவேன் என்று கிஷோர் சபதம் எடுத்த நிலையில், முடிவுகள் அவரது தலையில் இடியை இறக்கி இருக்கிறது. 2 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் தாண்டி, என்டிஏ கூட்டணி அபார வெற்றியை நோக்கி நகர, அதில் பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு பெருத்த பின்னடைவு என்பதோடு, காங்கிரஸ் படு தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதற்கிடையே தான், மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை முன்னிறுத்திக் கொண்ட பிரஷாந்த் கிஷோர், ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் மொத்தமாக காணாமல் போயுள்ளார். 2022ம் ஆண்டோடு தேர்தல் வியூக பணிக்கு முழுக்கு போட்ட பிரஷாந்த் கிஷோர், கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ‘ஜன் சுராஜ்’ எனும் கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொண்டார். சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு நடைபயணம் என்றெல்லாம், ’ஸ்டண்ட்’ செய்தபோது, மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. இதை ஒட்டியே, 150 தொகுதிகளில் வெற்றி, அல்லது 10 தொகுதிக்கும் கீழ் தோல்வி என வெளிப்படையாக அறிவித்தார் பிரஷாந்த் கிஷோர். தேர்தல் முடிந்து கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான போது, ஆளும் கட்சியான ஜேடியூ, 25 தொகுதிக்கு மேல் கூட வெற்றி பெறாது. அது நடந்தால் தான் அரசியலை விட்டே விலகுவேன் என்றும் சவால் விட்டார் பிரஷாந்த் கிஷோர். தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், என்டிஏ கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது. அதிலும் பெருவாரியான தொகுதிகளைப் பெற்று தனிப் பெருங்கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கும் நிலையில், முன்னிலை என்ற பக்கமே இல்லாமல் காணாமல் போயுள்ளது, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி. 238 தொகுதிகளில் ஜன்சுராஜ் போட்டியிட்ட நிலையில், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பிரஷாந்த் கிஷோர் சவால் விட்ட ஜேடியூ 79 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஒட்டுமொத்த நாட்டின் பார்வையே பீகார் பக்கம் திரும்பியுள்ளது. துவக்கத்தில் இருந்தே தேர்தல் முடிவில் பெரும் நம்பிக்கை தெரிவித்து வந்த பிரஷாந்த் கிஷோர், மண்ணை கவ்வி இருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது. மோடியை குஜராத் முதல்வராக்கியதில் துவங்கி, அவர் பிரதமராக வியூகம் வகுத்தது வரை நீண்டு, திமுக உட்பட பல கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி பார்த்த பிரஷாந்த் கிஷோர், தானே களத்தில் இறங்கி படுதோல்வியை சந்தித்திருப்பது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. தேர்தல் முடிவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள், முடிவை கணித்ததால் தான் பிரஷாந்த் கிஷோர் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லையா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதையும் பாருங்கள் - Bihar Election Results | காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்?உடைத்து சொன்ன பத்திரிகையாளர் மணி