Also Watch
Read this

தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. அதேவேளையில், செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பிறகு...
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

தவெகவுக்கு ஆதரவு
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் போது, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவளித்தனர். இதனால், மாவட்டச் செயலாளர்கள் பதவிகளை பறித்த இபிஎஸ், புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்நிலையில், இன்று மே 19ஆம் தேதி காலை அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதன்முறையாக எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இரண்டரை மணி நேரமாக...
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பு கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன் பங்கேற்றார். அவர், இபிஎஸ் அணிக்கு தமது ஆதரவை தெரிவித்தார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை முன்னர், போலீசார் குவிக்கப்பட்டனர். அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இரண்டரை மணி நேரமாக, இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் நிறைவு, தனியாக ஆலோசனை
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், மூத்த நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிசாமி தனித் தனியாக ஆலோசனை நடத்தினார். வாங்க பேசுவோம் என்று இபிஎஸ் கூறி உள்ள நிலையில், மூத்த நிர்வாகிகள் உடனான ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் மீது எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை என பரபரப்பு கூடிக் கொண்டிருந்த நிலையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கூடி, ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, பேசித் தீர்க்கலாம் என அழைக்கும் இபிஎஸ், 31 மாவட்டச் செயலாளர்களை நீக்கியது ஏன்? பொதுக் குழுவை கூட்டி கலந்து ஆலோசிக்க வேண்டும் என விவாதம் நடந்துள்ளது.

புதிய மாவட்ட செயலாளர்களின் நியமனம் செல்லாது
இதனை தொடர்ந்து, சி.வி.சண்முகம் கூறியதாவது;
அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்களின் நியமனம் செல்லாது. தேர்தலுக்கு முன்பு அதிமுக உடன் கூட்டணி அமைக்க தவெக விரும்பியது. ஆனால், தவெக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த வந்த போது இபிஎஸ் உதாசீனப்படுத்தி விட்டார்.

அதிமுக படுதோல்வி
வலிமையான கூட்டணியை அமைக்க மறுத்த காரணத்தால் தேர்தலில் தோல்வி அடைந்தோம். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அதை இபிஎஸ் ஏற்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் தவெகவுடன் கூட்டணி வைக்க நாங்கள் வலியுறுத்தினோம், அதையும் கேட்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலின்போதும் இபிஎஸ் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை.

ஓபிஎஸ்-ஐ ஏற்க மறுத்த இபிஎஸ்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தல்களில், அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியும் கடுமையாக சரிந்து வருகிறது. அடிப்படை உறுப்பினராக இருப்பேன் என்று ஓபிஎஸ் கூறிய போதும் அதனை ஏற்க மறுத்தார் இபிஎஸ். அதிமுகவை படுதோல்வி அடைய செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

பக்குவம் இல்லை
மே 4ல் தேர்தல் முடிவு வருகிறது, மே 5ல் திமுக உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என இபிஎஸ் சொன்னபோது கருத்துவேறுபாடு வந்தது. தோல்வியை ஒத்துக்கொள்ளும் பக்குவம் இபிஎஸ்க்கு இல்லை.

சட்டத்திற்கு புறம்பானது
பொதுக்குழுவை கூட்டுங்கள், அதில் பேசி முடிவெடுக்கலாம். எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளை மிரட்டி வைத்துள்ளார். வாருங்கள் பேசலாம் என கூறிவிட்டு எங்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குகிறார் எடப்பாடி பழனிசாமி. இது சட்டத்திற்கு புறம்பானது.
இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

கேள்விக்கு பதில் தர மறுப்பு
சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக, மூச்சு விடாமல் பேசிய சி.வி.சண்முகத்திடம், செய்தியாளர்கள் தொடர் கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால், எதற்கும் அவர் பதில் தரவில்லை. இந்த நிலையில், இபிஎஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved