news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news டாஸ்மாக் கடை விவகாரத்தை கவனத்தில் கொள்வாரா முதல்வர் விஜய்?
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் கடை விவகாரத்தை கவனத்தில் கொள்வாரா முதல்வர் விஜய்?

டாஸ்மாக் மூடலும் உண்மை கதையும்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆட்சிக்கு வந்ததுமே அதிரடியாக 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்ட நிலையில், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களில் இருந்து 500 மீட்டருக்குள் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அமைந்திருக்கிறது எனவும், அதிகாரிகள் தவறான தகவலை முதலமைச்சருக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள் எனவும் தகவல் கசிந்துள்ளது. மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் நிலை என்ன ஆகும்? என்ற கேள்விக்கு மத்தியில், டாஸ்மாக் கடைகள் மூடல் என்பதை செயல்படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல் என்னென்ன? என்ற வினாவும் எழுந்துள்ளது.

717 டாஸ்மாக் மதுக்கடை மூட ஆணை
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சியை பிடித்திருக்கும் விஜய், பதவியேற்ற மறு நாளிலேயே 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதாவது, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் 717 கடைகளை இரண்டு வாரங்களில் மூட வேண்டும் என முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து உத்தரவு வந்தது. முதலமைச்சர் உத்தரவை அடுத்து சென்னை, மதுரை மண்டலம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வந்தாலும், பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சரின் உத்தரவு
ஆட்சிக்கு வந்ததுமே டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த விஜய், முதலமைச்சராக கையெழுத்து போட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் எத்தனை கடைகள் இயங்குகிறது என கணக்கெடுக்க சொல்லி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது.

மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
தமிழ்நாட்டில் மொத்தமாக 4 ஆயிரத்து 765 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் அதாவது 500 மீட்டர் தூரத்தில் மட்டுமே 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகள் கொடுத்த ரிப்போர்ட்டில் 717 சில்லறை விற்பனை கடைகள் மட்டுமே இருப்பதாக தவறாக கணக்கு காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிகாரிகள் கொடுத்த அறிக்கை அடிப்படையில் 717 கடைகளையும் மூடச் சொல்லி முதலமைச்சர் உத்தரவு போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்று ஏற்பாடு என்ன?
717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்த தமிழக அரசு, அங்கு பணிபுரிந்து வந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒவ்வொரு கடையிலும் சூப்பர்வைசர் உட்பட அதிகபட்சம் 5 பேர் வரை பணிபுரிந்து வரும் நிலையில், அந்த ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராயாமல் 2 வாரங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு இருப்பதாக விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.+

ரூ.8,000 கோடி இழப்பு
அரசின் அறிவிப்பு மூலம் சென்னை போன்ற நகரங்களில் முக்கால்வாசி டாஸ்மாக் கடைகள் மூடப்படும். சென்னை மாதிரியான நகரங்களில் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டருக்குள் நிறைய டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், அந்த கடைகள் மொத்தமாக மூடப்படும் நிலை உருவாகி உள்ளது. இன்னொரு பக்கம் 2004ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மது விலக்கு திருத்த சட்டத்தில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது என்பது தான் விதியாக இருக்கிறது. ஆனால், 500 மீட்டருக்குள் இருக்கும் கடைகளை மூட வேண்டும் என்ற புதிய அறிவிப்பு சட்டத் திருத்தத்திற்கு முரணாக இருப்பதாக சொல்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர். அதோடு, அரசின் நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படக் கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

தனியார் மதுபான கூடங்கள்
டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், அதே பகுதிகளில் இயங்கும் தனியார் உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள், பார்கள் ஆகியவை அப்படியே தான் இயங்கி வருகின்றன. அரசு டாஸ்மாக் கடைகளை மூடினாலும் கூட, குடிமகன்கள் தனியார் பார்கள், மனமகிழ் மன்றங்களை நோக்கி செல்லக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆகையால், தனியார் பார்கள், மன மகிழ் மன்றங்களை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் முழுமையாக மது விற்பனையை கட்டுப்படுத்த முடியும். ஆனால், அரசு வழங்கிய உத்தரவில் தனியார் மதுபான கூடங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத சூழலில் அதுவும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம்
கடந்த திமுக ஆட்சியில் 500 மதுக்கடைகளை மூடப் பட்டதாக சொல்லப்பட்டாலும், அதிகளவில் மனமகிழ் மன்றங்கள், தனியார் மதுபான கூடங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது சர்ச்சையானது. தற்போதும், டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு தனியார் மது பான கூடங்களுக்கு அனுமதி வழங்கி விடக் கூடாது என்பது சமூக ஆர்வலர்கள் கூறும் கருத்தாக உள்ளது. இதனிடையே, டாஸ்மாக் கடைகள் மூடல் என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 8 ஆயிரம் கோடி வருவாயை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றார்.

அடுத்தடுத்து கடைகள் மூடல்
2011ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. இதனையடுத்து, 2017ல் இ.பி.எஸ். ஆட்சி பொறுப்பேற்ற போதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுகவும் 500 கடைகளை மூடுவதாக கூறியது.

கூடுதல் கவனமும் பொறுப்பும்
ஆனால், ஒரு இடத்தில் மூடப்பட்டாலும் வேறு இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு வந்தது விமர்சனத்தை தேடி தந்தது. அதோடு, கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனையும் பெருகி போனது. கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் சந்து கடைகளின் பாதிப்பு கிராமங்களில் கடுமையாக எதிரொலித்தன. இதனாலேயே, பெண்கள் மத்தியில் கடந்த திமுக அரசுக்கு எதிரான மன நிலை ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். ஆகையால், டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

கள ஆய்வு முக்கியம்
டாஸ்மாக் கடைகள் மூடல் என்பது பெயரளவில் இல்லாமல் தீவிரமாக கண்காணித்து செயல்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. மூடப்படும் கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் கடைகளை திறக்காமலும், அதே சமயம் தனியார் மதுபான கடைகள் பெருகி விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையால், டாஸ்மாக் கடைகள் மூடல் என அறிவிப்போடு நின்று விடாமல் அது களத்தில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Link
ராமேஸ்வரம் கோவிலில் லட்டு மோசடி, ரூ.3.5 கோடி ஏப்பம்

ராமேஸ்வரம் கோவிலில் லட்டு மோசடி, ரூ.3.5 கோடி ஏப்பம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

0
9 mins agoshare
மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved