Also Watch
Read this
By: Manigandan Raja

உலக நாடுகளை ஒரு நாடு மிரட்டுவதை அனுமதிக்க முடியாது :
தனி ஒரு நாடு உலக நாடுகளை மிரட்டுவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ அனுமதிக்க முடியாது என ஈரான் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும், இதற்கு சம்மதிக்காவிட்டால் எந்த ஒப்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதிகார போக்கை கை விட்டால் மட்டுமே உடன்பாடு :

சர்வதிகார போக்கை கை விட்டால் மட்டுமே அமெரிக்காவுடன் உடன்பாடு என ஈரான் அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு ஈரான் அணு ஆயுத திட்டத்தை கைவிட மறுத்ததே காரணம் என அமெரிக்க கூறியிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர், ஈரான் நாட்டு உரிமைகளை அமெரிக்கா மதிக்கும் என்றால் உடன்பாடு எட்டுவதற்காக வழிகள் நிச்சயம் கண்டறியப்படும் என்றார்.
ஹோர்முஸ் நீரிணையை நெருங்கினால் அழிக்கும் படி உத்தரவு :
ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை உடனடியாக அழிக்கும் படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே ஈரானிடம் இருந்த கடற்படை முழுவதும் அழிக்கப்பட்டு விட்டதாகவும், எனினும், சிறிய ரக அதி விரைவு கப்பல்கள் உள்ளதாகவும், அந்த சிறிய கப்பல்களும் அழிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் பிரச்சனை முடிந்த பிறகு அடுத்த டார்கெட் கியூபா :

ஈரான் பிரச்னை முடிந்த பிறகு, அடுத்த டார்கெட் கியூபா தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கியூபா நீண்ட காலமாக மிகவும் மோசமாக நிர்வகிக்கப்படும் நாடாக இருந்து வருவதாகவும், மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்குவதாகவும், கியூபா அமெரிக்கர்கள் பலர், கொல்லப்பட்டுள்ளதாகவும், வீழ்ச்சியடைந்து வரும் அந்த தேசத்தை சரி செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏராளமான மக்கள் போராட்டம் :
அமெரிக்காவின் ஹோர்முஸ் நீரிணை முற்றுகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரானில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் தெஹ்ரானில் திரண்ட பொதுமக்கள், ஈரான் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு, அந்நாட்டுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
லெபனான் - இஸ்ரேலிய தூதர்கள் இன்று சந்திப்பு :
வாஷிங்டனில் இன்று நடைபெறவுள்ள லெபனான் - இஸ்ரேலிய தூதர்களின் சந்திப்பை ரத்து செய்யுமாறு ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம், லெபனான் அரசை வலியுறுத்தி உள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், இந்த பேச்சுவார்த்தைகள் பயனற்றவை எனவும், லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை தங்களது ஆயுதக் குழு தொடர்ந்து எதிர்கொள்ளும் எனவும் கூறினார்.
மன்ஹாட்டன் நகரில் ஏராளமான அமெரிக்கர்கள் போராட்டம் :
இஸ்ரேலுக்கு கூடுதல் ஆயுதங்களை விற்பனை செய்வதை தடுக்கும் செனட் வாக்கெடுப்பிற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க செனட்டர்களை வலியுறுத்தி, நூற்றுக்கணக்கானோர் மன்ஹாட்டன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"குண்டுகளுக்கு அல்ல, மக்களுக்கு நிதியளியுங்கள்" என்று எழுதப்பட்ட டி சர்ட்டுகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, அப்புறப்படுத்தினர்.
தங்கள் நாட்டு மக்கள் மீதே நைஜீரியா விமானப்படை தாக்குதல் :

நைஜீரிய விமானப்படை தவறுதலாக தங்கள் நாட்டு மக்கள் மீதே நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். நைஜீரிய விமானப் படையின் போர் விமானங்கள் பயங்கரவாதிகளை குறிவைப்பதற்கு பதிலாக, யோபே மாநிலத்தில் உள்ள ஒரு கிராம சந்தையில் கூடியிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved