காத்திருந்த பைக் பற்றிய திடீர் தீ : நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருள் நிரப்பி வரும் நிலையில், யாழ்ப்பாணம் பிரதான சந்தைக்கு முன்பாக உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 10:30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான காய்கறிச் சந்தைக்கு அருகாமையிலுள்ள பெட்ரோல் நிலையத்தில், அதிகளவிலான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் தனது 'பல்சர்' ரக மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக எரிபொருள் விநியோகிக்கும் கருவிக்கு மிக அருகில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார். அச்சமயம், எதிர்பாராத விதமாக அந்த மோட்டார் சைக்கிள் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. குறித்த நேரத்தில் அங்கு சுமார் 300 முதல் 400 வரையிலான பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்ததால், பெரும் பதற்றமும் அச்சமும் உருவானது. தீப்பற்றிய உடனே பெட்ரோல் நிலைய ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டு, அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஊழியர்களின் இந்த வேகமான செயல்பாட்டினால், ஒரு மிகப்பெரிய வெடிப்புச் சம்பவமோ அல்லது உயிர்ச் சேதங்களோ தவிர்க்கப்பட்டன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார மற்றும் இஸ்ரேல் - ஈரான் போர் போன்ற காரணத்தால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில், பழைய வாகனங்களையும் பொருட்படுத்தாமல் மக்கள் எரிபொருளைச் சேமிக்க முற்படும் நிலையில் இவ்வாறான விபத்துக்கள் எச்சரிக்கையாக அமைந்துள்ளன. சம்பவம் நடந்த இடம் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான வர்த்தக மையப் பகுதி என்பதால், இந்தத் தீ விபத்து அந்தப் பகுதியில் சில மணிநேரம் பெரும் போக்குவரத்து நெரிசலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. Related Link துபாய் மீது புகை எழும் செயற்கைக் கோள் படங்கள் வெளியானது